![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chennai Beach Open: சென்னை கடற்கரைகளில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி
சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
![Chennai Beach Open: சென்னை கடற்கரைகளில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி Chennai Beach Open Public allowed to visit beaches from February 1 following Covid 19 guidlines wearing mask Chennai Beach Open: சென்னை கடற்கரைகளில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/30/f78ccd9329d6ab125c60bd261464a487_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவற்றை மாநில அரசு அமல்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்திருந்த காரணத்தால், முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு தளர்த்திக் கொள்ளப்படுவதாக மாநில அரசு அறிவித்தது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் வரும் பிப்ரவரி 1-ந் தேதி ( நாளை மறுநாள்) முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் அனுமதிக்கப்பட்டாலும், பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதே சமயத்தில், கடற்கரைகளில் மக்கள் கூட்டமாக கூடக்கூடாது என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு இயல்பாகவே தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். காலையிலும், மாலையிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும். வழக்கமாக காணும் பொங்கல் தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மெரினா கடற்கரை மட்டுமின்றி சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரை, பட்டினம்பாக்கம் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, நீலாங்கரை, பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுவது இயல்பு. பெசன்ட் நகர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதும் வழக்கமான ஒன்றாகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த கடற்கரைகளும் மக்கள் கூட்டமின்றி உற்சாகமின்றி காணப்பட்டது. இதனால், கடற்கரைகளில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரசின் பாதிப்பு மக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் இரண்டு ஆண்டுகளாக ஏராளமான உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஒரு பக்கம் கடன்... மறுபக்கம் மகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் மோகம்... ஏடிஎம் கொள்ளை முயற்சியில் வெளிவந்த உண்மை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)