சென்னையில் அதிர்ச்சி! வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் சக்தி என்ற 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் சக்தி என்ற 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவன் திருநின்றவூர் கோமதிபுரத்தை சேர்ந்த ஹரிசுதன் என்ற மாணவன் சிறுவயதில் இருந்த இதய நோய் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று ( மே 30ம் தேதி) மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்தாண்டு இவரது அம்மாவும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இறந்து போன ஹரிசுதன் உடலை பார்க்க திருநின்றவூர் தாசர் மேல்நிலைப் பள்ளியில் உடன்படித்த சக வகுப்பு நண்பனான சக்தி என்ற மாணவன் வந்தபோது வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இந்த சிறுவனுக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருப்பதாலும், மற்ற இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மாணவன் சக்தி வணிக கணித பாடத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர். நண்பனின் உடலை பார்க்க சென்றபோது, சுருண்டு விழுந்து பரிதாபமாக மாணவன் சக்தி உயிரிழந்தது அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை மட்டுமின்றி திருநின்றவூர் தாசர் மேல் நிலைபள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.