மேலும் அறிய
Advertisement
ஒதுக்கப்பட்ட குடும்பம்.. கொல்லப்பட்ட நாய்கள்.. ஊர் கட்டுப்பாடு என்னும் பெயரில் புறக்கணிப்பு கொடுமையா?
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புதுநடுக்குப்பம் பகுதியில், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் தெரிவிக்கின்றனர்
மீனவ கிராமங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன, ஒவ்வொரு மீனவர் கிராமங்களிலும் ஊர் கட்டுப்பாடு என்ற முறை இருந்து வருகிறது. ஊர் கட்டுப்பாட்டை கடைபிடிக்க பஞ்சாயத்துதாரர்கள் என்ற முறை பல மீனவ கிராமங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த புதுநடுக்குப்பம் கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து, அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த சிறிய கிராமத்தில் 100க்கும் குறைவான பொதுமக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் , இளமதி (52), வேலாயுதம் (48), சேகர் (46), ஆரணி (42), ஆரணி (62) ஆகிய ஐந்து நபர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார் மனு
இது குறித்தும் 5 நபர்களும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் , சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் தங்கள் 5 பேரையும் அந்த இடத்தை சென்னை சேர்ந்த ஒருவருக்கு விற்று விடுமாறு கூறி, 100 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்திட்டு தருமாறு தொடர்ந்து மிரட்டி வந்தனர். ஆனால் நாங்கள் கையெழுத்திட மறுத்து விட்டோம், இதன் காரணமாக பஞ்சாயத்துகாரர்கள் கிராமத்தைச் சேர்ந்த 5 குடும்பங்களையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர் கட்டுப்பாடு
இதனால் அந்த கிராமத்தில் உள்ள கடைகளில், சம்பந்தப்பட்ட ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட எந்த வித பொருட்களும் விற்கக் கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக, தெரிகிறது. அதேபோல கிராமத்திலிருந்து ஆட்டோவில் செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
திருமணம்
இது தவிர கடந்த ஒன்றாம் தேதி அன்று நடைபெற்ற, இளமதி என்பவரின் மகன் அஜித்குமார் திருமண நிகழ்ச்சியில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களையும் கலந்து கொள்ளக் கூடாது என பஞ்சாயத்துகாரர்கள் அறிவித்ததாக தெரிகிறது. பஞ்சாயத்துதாரர்களின் உத்தரவை மீறி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், ஒவ்வொரு நபர்களுக்கும் தலா 10,000 அபராதம் கட்ட வேண்டும் என்று பஞ்சாயத்துதாரர்கள் உத்தரவிட்டதாக புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல பிரதானமாக மீன் பிடி தொழில் செய்யும் படகை கடலில் இருந்து, கடற்கரையில் டிராக்டர் உதவியுடன் இழுத்து நிலை நிறுத்துவதற்கு, அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் செய்வது அறியாமல் ஐந்து நபர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நாய்கள்
இதையும்விட உச்சகட்டமாக கடந்த 26 ஆம் தேதி, செல்ல பிராணிகளாக வளர்த்து வந்த நான்கு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நாய்களை சுடுவதை போல் உங்களையும், குடும்பத்தையும் சுட்டு விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வீடியோவும் , வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை நடத்தப்படும்
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இது சம்பந்தமாக நாளை அந்த பகுதியில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் நாய்கள் சுடப்பட்டு இருக்கும், வீடியோவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion