யார் ஆட்சி நடக்குது தெரியுமா? - அதிகாரிகளிடம் திமுக ஓ.செ அடாவடி
’’வாக்குவாதத்தின் போது அங்கிருந்த ஊடகத்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளரை வீடியோ எடுப்பதை பார்த்து அந்த இடத்தை விட்டு உடனடியாக ஒன்றிய செயலாளர் தப்பிச் சென்றார்’’
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள புக்கத்துறை பகுதியில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை சார்பாக, மறைந்த முதல்வர் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திமுகவை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகவேல் மற்றும் அதிமுகவின் ஒன்றிய செயலாளர், அப்பாத்துரை அதேபோல அரசு சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொது சுகாதார முகாமில் காய்ச்சல், பொது மருத்துவம், தோல் நோய் உள்ளிட்ட அடிப்படை மருத்துவத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான அரசு மருத்துவர்கள் பொது மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வந்திருந்தனர். இதற்கு முன்னதாக, துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், திமுகவை சேர்ந்த மாவட்டக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் பேச துவங்கிய போது, அங்கு வந்த திமுக மதுராந்தக வடக்கு ஒன்றிய செயலாலர் சத்யசாய் மேடையில் இருந்து கீழே இறங்குமாறு கூச்சலிட்டார். திமுக ஒன்றிய செயலாளரின் செயலால் அதிர்ந்த மாவட்ட குழு தலைவர் செம்பருத்து துர்கேஷ் உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். ஒன்றிய செயலாளர் எதிர்ப்பின் காரணமாக மாவட்ட குழு தலைவர் உடனடியாக அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
திமுகவின் ஒன்றிய செயலாளர் சத்திய சாய் அங்கிருந்த மருத்துவ மற்றும் வட்டார அலுவலர்களிடம், ஆளுங்கட்சியை கூப்பிடாமல் ஏன் அரசு நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் என்று , தகாத வார்த்தைகளில் அதிகாரிகளை வசை பாடினார். மேலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவரை அழைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என எடுத்துக் கூறியும் தொடர்ந்து ஒன்றிய செயலாளர் அதிகாரிகளை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊடகத்துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளரை வீடியோ எடுப்பதை பார்த்து அந்த இடத்தை விட்டு உடனடியாக ஒன்றிய செயலாளர் தப்பிச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்