Chengalpattu : வலை வீசி தேடுதல் வேட்டை.. போலீஸ் காட்டிய தீவிரம்.. சிக்கிய 560 லிட்டர் கள்ளச்சாராயம்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச்சாராயம் 140 லிட்டர் எரிசாராயம் மற்றும் 420 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் பேரல்கள் பறிமுதல் செய்தனர்.
களத்தில் இறங்கிய செங்கல்பட்டு போலீஸ்
செங்கல்பட்டு : வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர், பகலவன் மேற்பார்வையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்திற்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் உட்பட 120 போலீசார் கொண்டு குழுவினர் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஓதியூர், நைனார்குப்பம், பனையூர்குப்பம் பகுதிகளில் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.
இதுவரை ஓதியூர் கிராமத்தில் 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 4 எரிசாராய கேன்கள், நைனார்குப்பம் கிராமத்தில் 200 லிட்டர் கொள்ளளவு உள்ள 1 கள்ளச்சாராய ஊரல் பேரல், 75 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 கள்ளச்சாராய ஊரல் பேரல் மற்றும் 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 கள்ளச்சாராய ஊரல் கேன்கள் ஆக மொத்தம் 140 லிட்டர் எரிசாராயம் மற்றும் 420 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் பேரல்கள் பறிமுதல் செய்தனர்.
பிரத்யேக எண்
இதில் சம்மந்தப்பட்ட நபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும், இந்த கள்ளச்சாராய வேட்டை தொடர்ந்து நடைபெற்று முற்றிலும் சாராய கும்பலை அடக்கி ஒடுக்கி சாராயத்தை அறவே ஒழிக்கப்படும் எனவும், இதுபோன்ற கள்ளச்சாராய நடமாட்டம் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பது போன்ற தகவல்கள் தெரிந்திருந்தால் காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 7200 102 104 மற்றும் 90427 81756 ஆகிய பிரத்யேக எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். குற்றவாளிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்