Chembarambakkam Lake: செம்பரம்பாக்கத்தில் இருந்து வந்த ஆறுதல் செய்தி.. நீர்வரத்து எப்படி இருக்கு ?
Chembarambakkam Lake Water Level: கடந்த சில மணி நேரங்களாக மழை குறைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து குறைந்துள்ளது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது.
செம்பரபாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 13.61 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 1.286 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை 1080 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து ஆனது 865 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை முன்னெச்சரிக்கை என்ன ?
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.