கடுமையான பனிமூட்டம்.. ரோடே தெரியல.. காஞ்சிபுரத்தில் விபத்து : 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே பனிமூட்டம் காரணமாக காரும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மார்கழி மாதம் என்பதால் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையாக குளிரும், பனிமூட்டமும் இருந்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. காஞ்சிபுரம் உத்திரமேரூரை அடுத்து அமைந்துள்ளது பெருநகர்.
இந்த பகுதியில் அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்து காரணமாக, காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. 30 வயதான அவர் சொந்தமாக வாட்டர் சர்வீசஸ் வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் மூலம் இடத்தை தேர்வு செய்துள்ளார்.
வாட்டர் சர்வீஸ் தொடங்குவதற்கான பொருட்களை சென்னையில் வாங்கலாம் என்றும் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அரியலூரில் இருந்து காஞ்சிபுரம் வந்த சுந்தரமூர்த்தி, ஓரிக்கையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, பின்னர், பேரம்பாக்கத்தில் உள்ள தனது உறவினரைச் சந்திக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக, அதிகாலையிலே சுந்தரமூர்த்தி தனது நண்பர்களான சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 27), மற்றும் செல்வம் ( வயது 29) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
காரை சரவணன் ஓட்டி வந்துள்ளார். அப்போதுதான் உத்திரமேரூர் அருகே கடும் பனிமூட்டம் காரணமாக எதிரே வந்த வேன் மீது கார் மோதி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. காருடன் மோதிய வேனில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்கள் பயணித்து வந்துள்ளனர். அவர்களில் 13 பெண்கள், 3 ஆண்களுக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு சென்ற வேன் மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்