மனம் மாறினாரா சீமான் ? ஒரே மேடையில் அண்ணாமலை, சீமான்.. திமுகவிற்கு எதிரான திட்டமா ?
சென்னை அருகே நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில், சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் கலந்து கொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில், சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் கலந்து கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் நிர்மலா சந்திப்பு ?
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த கூட்டணி அமைவதற்கு ஆதரவாக பல அதிமுக தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல்கள் வெளியானது. அவரை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் நிர்மலா சீதாரமனை சந்தித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக மறுத்த சீமான்
இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், அந்த தகவலில் உண்மை இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்தார். தனியாக போட்டியிடுவதாக கூறி நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறோம். சந்தித்திருந்தால், சந்தித்தேன் என நேரடியாக சொல்வேன் என சீமான் தெரிவித்து இருந்தார்.
ஒரே நிகழ்ச்சியில் அண்ணாமலை, சீமான் !!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில், மாநில அளவிலான மாபெரும் பேச்சு போட்டியின் இறுதி சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சுத்திறனை அறியும் விதத்தில் 9 மண்டலங்களாக பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
அதன் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். எஸ்.ஆர். எம் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இணைகின்றதா எதிர்க்கட்சிகள் ?
சமீப காலமாக திமுகவை சீமான் அதிகளவு விமர்சனம் செய்து வருகிறார். சீமானின் கொள்கை தலைவரா இருக்கக்கூடிய பெரியாரையும் சீமான் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அண்ணாமலை மற்றும் சீமான் இருவரும் இணைந்து ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது பின்னணியில் அரசியல் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக மற்றும் அதிமுக பொருத்தவரை வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் சீமான் தங்கள் கூட்டணிக்கு வந்தால், திமுகவை வீழ்த்தி விடலாம் என இரண்டு கட்சிகளும் கணக்கு போட்டு வருகின்றன. இந்தநிலையில் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

