’பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்’- நடவடிக்கை எடுக்க கோரி பாஜக ஆட்சியரிடம் மனு
'’விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக ஆட்சியரிடம் கோரிக்கை மனு’’
பஞ்சமி நிலங்களை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆக்கிரமித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். பாஜகவின் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரகு ஆகியோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கீழ் எடையாளம் கிராமத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில், விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் சுமார் 110 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தன் மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருகிறார். அவரது பல நிறுவனங்களில் இதே போல் பஞ்சமிநிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
Journalist Thuglak Ramesh Interview: உதயநிதி என்ன MGR ஆ? எதற்கு இவ்வளவு புகழணும்?
இந்த இடம் மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது உரிய விசாரணை செய்து, பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வந்த பாஜகவின் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இதில், சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் நிபந்தனை மீறப்பட்டதாக தெரிய வருகிறது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. மொத்தத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளன.
TN Assembly : குடிநீர் இணைப்பு இனி வீடு தேடி வரும் - கே.என்.நேரு அதிரடி
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் 110 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை மீட்டு பட்டியல் இன சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ளனர். மேலும் பஞ்சமி நிலங்களை யாராலும் வாங்க முடியாது என்றும், அரசு ஆவணங்களிலேயே திருத்தங்களை செய்து மோசடி செய்திருக்கின்றனர் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Rule 110: 110 விதி என்றால் என்ன? இதன் கீழ் வரும் அறிவிப்புகள் விவாதிக்கப்படாதது ஏன்?