ஆவடிக்கு வந்த அசத்தலான அப்டேட்.. பிரம்மாண்ட மாநகராட்சியாக மாறும் ஆவடி.. இணையும் நகராட்சிகள், ஊராட்சிகள் என்னென்ன ?
Avadi Corporation: ஆவடி மாநகராட்சியில் புதிதாக மூன்று நகராட்சிகள் மற்றும் 19 ஊராட்சிகள் இணைய உள்ளன.
இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் இன்றி அமையாது ஒன்றாக உள்ளது. ஊராட்சி அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களும், அதிகமாக இருப்பதால் உள்ளாட்சி அமைப்பு கட்டமைப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியுடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளனர். இதன் மூலம் நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பரப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி - Avadi City Municipal
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆவடி நகராட்சியின் 48 வார்டுகளும் மற்றும் அதற்குட்பட்ட திருமுல்லைவாசல், கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் அடங்கிய பகுதியாக ஆவடி மாநகராட்சி இருந்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் மிக முக்கிய பகுதியாக ஆவடி இருந்து வருகிறது. தொடர்ந்து ஆவடி அதிக வளர்ச்சியை நோக்கி பயணித்து வருவதால், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஆவடி மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றன. 2022 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற, மாநகராட்சி தேர்தலில் திமுக 43 (திமுக கூட்டணி கட்சிகள்) வார்டுகளையும், அதிமுக 4 வார்டுகளையும் மற்றும் சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றியது. காவடி மாநகராட்சியில் தற்போது மேயராக உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஆவடி மாநகராட்சியில் உள்ளாட்சிகள் மற்றும் 19 ஊராட்சிகள் இணைந்து , மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட உள்ளன.
ஆவடி மாநகராட்சியில் இணையுள்ள நகராட்சி மற்றும் ஊராட்சிகள் பட்டியல்
ஆவடி மாநகராட்சியில் திருவேற்காடு நகராட்சி, பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி ஆகியவை இணைய உள்ளன. மேலும் ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் இணைய உள்ளன. நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், நசரத்பேட்டை, அகரம் மேல், வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம், மேப்பூர், பாலவேடு, வெள்ளனூர், மோரை, கருணாகரச்சேரி, சோரன்சேரி, பனவீட்டுத் தோட்டம், கண்ணப்பாளையம், பரிவாக்கம் ஆகிய 18 ஊராட்சிகள் ஆவடி மாநகராட்சியுடன் இணை உள்ளன. புதிதாக நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைவதால் ஆவடி மாநகராட்சி சுமார் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மாநகராட்சியாக மாற உள்ளது .
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வருகின்ற ஜனவரி மாதத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிகள் இணைவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாநகராட்சி தேர்தல் நடத்தும் வரை, சம்பந்தப்பட்ட நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் அதே கட்டமைப்புடன் இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆவடி மாநகராட்சி எல்லை விரிவு படுத்தப்பட்டுள்ளதால், சென்னை புறநகரில் இருக்கும் முக்கியமான நகராட்சியாக ஆவடி மாநகராட்சி உருவெடுக்க உள்ளது. இதன்மூலம் ஆவடி மாநகராட்சியின் , மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உள்ளது.
நகராட்சி மற்றும் ஊராட்சிகள் இணைவதால் என்ன நடக்கும் ?
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுவதால், மாநகராட்சியில் எல்லை அதிகரிப்பதால், மாநகராட்சிக்கு வருவாய் பெருகும். ஆவடி மாநகராட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், மாநகராட்சி சுற்றியும் வளர்ச்சியை பெருக்க உதவும். மேலும் குடிநீர், தூய்மை பணி உள்ளிட்டவை முறையாக நடைபெறும். மாநகராட்சியுடன் இணைவதால், சொத்து வரி உள்ளிட்டவை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.