Raid: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா? சென்னை உள்பட 18 இடங்களில் சோதனை..
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சென்னை, கோவை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள வீடு, அலுவலகங்களின் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்துகின்றனர்.
2016-2021 அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை தி.நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்ய நாராயணன் என்கின்ற தி.நகர் சத்யா. வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீச்சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொத்துகுவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் உள்ள ராஜேஷ் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தியாகராய நகர் சத்ய நாராயணன் மற்றும் ராஜேஷ் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக தகவல் வெளியான நிலையில், ஐந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இருவருடைய இல்லங்களிலும் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.