அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ; ஆளும் கட்சிக்கு ஒரு நீதி , எதிர்கட்சிகளுக்கு ஒரு நீதியா? - ஆர்.பி. உதயகுமார்
அதிமுக காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக வெளிநடப்பு
இன்றையை சட்டப்பேரவை நிகழ்வின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது ;
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தோம். காவல் துறையை கையில் வைத்திருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தோம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டது தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி என்பது யாரும் மறுக்க முடியாது.சென்னை மாநகர காவல் ஆணையரின் பேட்டியும், உயர் கல்வித்துறை அமைச்சரின் பேட்டியும் முரணாக உள்ளது.
புகார் அளிப்பது அரிதான ஒன்று
பாலியல் சார்ந்த குற்றம் நடந்தது என்று சொன்னால் முதல் தகவல் அறிக்கையை வெளியிடக் கூடாது என்பது விதி. பாலியல் பிரச்சனைகளில் பெண்கள் புகார் அளிப்பது அருகிலும் அரிதான ஒன்று. எஃப்.ஐ.ஆர் ஐ வெளியிட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆர்ஐ வைத்ததற்கு நாங்கள் காரணம் இல்லை மத்திய அரசின் அமைப்புதான் காரணம் என விளக்கம் தந்திருக்கிறார்கள். மத்திய அரசின் அமைப்பாக இருந்தாலும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
அரசு ஆவணங்களை எல்லாம் வெளியிட்டு விட்டு இது போன்ற காரணம் சொல்ல முடியுமா. வெளியான எஃப்.ஐ.ஆர் - ல் சாரோடு நீ சிறிது நேரம் இருக்க வேண்டும் எனவும் , மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டதாகவும் பதிவாகி இருக்கிறது. எனவே அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு அதிமுக போராடினால் வழக்கு தொடரப்பட்டு கைது செய்கிறார்கள் ஆனால் ஆளுநருக்கு எதிராக ஒரே நாளில் திமுக திட்டமிட்ட போராட்டத்திற்கு அனைத்து இடங்களிலும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி. மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி. அதிமுக காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்காமல் பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுவது இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதாக தோன்றுகிறது என தெரிவித்தார்.