Aircraft Engine trouble :சென்னையில் இருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீர் எந்திர கோளாறு... பயணிகளின் நிலை என்ன?
சென்னையில் இருந்து புறப்பட இருந்த கத்தார் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், 336 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து கத்தார் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், நல்வாய்ப்பாக 336 பேர் உயிர் தப்பினர்.
விமானத்தில் கோளாறு
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 324 பயணிகள் 12 விமான ஊழியர்கள் என 336 பேர் விமானத்தில் இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல தொடங்கிய போது விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார்.ன்விமானி அவசரமாக ஓடுபாதை அருகே விமானத்தை நிறுத்தினார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் அளித்தார்.
பயணிகள் தவிப்பு
இதையடுத்து விமானம் இழுவை வாகனம் மூலம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டதுடன் பயணிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.விமானத்தை பழுது பார்க்கும் பணி மாலை வரை முடியாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 324 பயணிகளும் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த விமானம் பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் தான் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் செல்ல வேண்டிய பயணிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் எந்திரக்கோளாறு தொடர்பாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.