Mansoor Ali Khan son: மன்சூர் அலிகானின் மகனுமா? போதைப் பொருள் வழக்கில் கைது, காட்டிக் கொடுத்த செல்போன்..!
Mansoor Ali Khan son: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Mansoor Ali Khan son: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக்கிடம், போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார் தீவிர விசாரணை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக அலிகான் துக்ளக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு, சினிமா துறையினர், கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பலருக்கும் வாங்கிக் கொடுத்தத குற்றச்சாட்டில் தான் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் விஸ்காம் படித்த அலிகான் துக்ளக், தற்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி செய்து வருகிறார். தந்தை மன்சூர் அலிகானே எழுதி இயக்கும் ஒரு படத்தில், துக்ளக் நாயகனாக நடித்தும் வருகிறார்.
மன்சூர் அலிகான் மகன் சிக்கியது எப்படி?
அண்டை மாநிலங்களில் இருந்து கடந்தி வந்து, தமிழ்நாட்டிற்கும் போதைப்பொருட்களை விற்பனை செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக போலீசாரும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மண்ணடி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர்.
”செல்போனில் இருந்த துக்ளக்கின் எண்”
விசாரணையில் கைதான கும்பல் கஞ்சா மட்டுமின்றி அதிக விலை கொண்ட மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்களையும் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, யாருக்கெல்லாம் போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி, சென்னை தனிப்படை போலீசார் காட்டாங்கொளத்தூர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைதாகினர்.
அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தபோது தான், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் (26) போன் நம்பரும் அதில் இருந்தது தெரியவந்தது. அதன்பேரிலேயே தற்போது அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.