விபத்து இழப்பீடு வழக்கு; போலி இன்சூரன்ஸ் தாக்கல் செய்த நபருக்கு வந்த தீர்ப்பு என்ன தெரியுமா ?
போலி இன்சூரன்ஸ் பாலிசி தாக்கல் செய்ததால் , 2.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, பாதிக்கப்பட்ட நபருக்கு கார் உரிமையாளரே செலுத்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு.

இருசக்கர வாகனம் மீது கார் மோதல்
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் காஜா செஞ்சு பிரகாஷ் ( வயது 20 ) கடந்த 2022 செப்டம்பர் மாதம் 8 - ம் தேதி , அம்பத்துார் எஸ்டேட் அருகே தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மாருதி கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் காஜா செஞ்சு பிரகாஷ் - க்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.
சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு
படுகாயமடைந்த நபர் தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி , சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் , பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முத்து முருகன் , விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் பரமசிவம் தாக்கல் செய்த வாகனத்தின் இன்சூரன்ஸ் பாலிசி , இருசக்கர வாகனத்துக்கு வழங்கப்பட்டது.
போலி இன்சூரன்ஸ் தாக்கல்
அவர் போலி இன்சூரன்ஸ் பாலிசியை தாக்கல் செய்ததால் , இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்க தேவையில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மனுதாரர் பிரகாஷுக்கு 2.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை கார் உரிமையாளர் பரமசிவம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
நடைபயிற்சி சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை மாடு முட்டி தூக்கி வீசியது.
சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாய்ராம் ( வயதள 61 ) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதே போல காலை புழல் கதிர்வேடு சாலை , பாலாஜி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே வந்த மாடு ஒன்று திடீரென சாய்ராமை முட்டி துாக்கி சாலையில் வீசியது. சாலையில் விழுந்த சாய்ராமை விடாமல் மாடு முட்டியது. இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் சாய்ராமை மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக ஐ.சி.எப் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாய்ராமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புழல் போலீசார் வழக்கு பதிந்து மாட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.




















