பயங்கர ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் வந்திறங்கிய ஆபத்து..
Spoilt Meat : ரயில் மூலமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Chennai Spoilt meat : பயணிகள் போக்குவரத்துக்காக மட்டுமின்றி சரக்கு போக்குவரத்துக்காகவும் ரயில்வே முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வேறொரு மாநிலத்திற்கு பொருட்களை ரயில்கள் மூலம் அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
1556 கிலோ:
உணவுப்பொருட்களையும் ரயில்கள் மூலம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கெட்டுப்போன இறைச்சிகளை கொண்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டிருந்த இறைச்சி கெட்டுப்போகி இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 1556 கிலோ இறைச்சி கெட்டுப்போகி இருந்தது. உடனடியாக இந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த இறைச்சியை அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கெட்டுப்போன இறைச்சி:
பொதுவாக ரயில்களில் உணவுப்பொருட்களை கொண்டு வருவதற்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த கெட்டுப்போன இறைச்சி உரிய சான்றிதழ் இல்லாமல் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த இறைச்சிகள் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகளுக்கு விநியோகிக்க திட்டமிப்பட்டு இருந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த இறைச்சியை அங்கிருந்து அனுப்பியவர்கள் மற்றும் இங்கு பெற திட்டமிட்டு இருந்தவர்களிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுபோன்று இனியும் ரயில்களில் கெட்டுப்போன இறைச்சி கொண்டு வரப்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 600 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற கெட்டுப்போன இறைச்சிகள், உணவுப்பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உணவு தயாரிப்பு நிறுவனங்களிலும் அவ்வப்போது அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.