செங்கல்பட்டு: 130 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்! டிசம்பரில் திறப்பு, பயணிகளுக்கு கொண்டாட்டம்!
Chengalpattu new bus stand update : "130 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் வரும் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்"

Chengalpattu Suburban Bus Stand: "செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது"
வளர்ச்சியின் பாதையில் செங்கல்பட்டு
சென்னையின் புறநகர் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின், தலைநகரமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டில் நகர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வருகிறது. இதுபோக சென்னைக்கு இணையாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் வேகமாக வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய பல்வேறு இடங்களில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்தும் வருகின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வேலைக்காக படை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டு பேருந்து நிலையம் - Chengalpattu New Bus Stand
செங்கல்பட்டு நகர் பகுதியில், கடந்த 1989 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் இப்போது மக்கள் தொகை அதிகரித்து இருப்பதால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நெரிசல் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், மதுராந்தகம், தாம்பரம், திருப்பதி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால் செங்கல்பட்டில் இருந்து, கூடுதல் பேருந்துகள் இயக்குவது சவாலாக இருந்து வருகிறது.
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை
இது மட்டுமில்லாமல் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான, வெளியூர் பயணிகள் தங்கி பணிபுரிந்து வருவதால், வெளியூர் பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு நேரடி பேருந்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஒன்று செங்கல்பட்டு டோல்கேட்டில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. செங்கல்பட்டு டோல் கேடில் பேருந்தில் இடம் கிடைக்காது என்பதால், பெரும்பாலான பயணிகள் கிளாம்பாக்கத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். எனவே செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில், செங்கல்பட்டு புறநகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது .
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் - Chengalpattu Suburban Bus Stand
பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் செங்கல்பட்டு புறநகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு இறங்கியது. செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான சுமார் 40,274 சதுர மீட்டரில் (சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு) பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைய முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல் மற்றும் 2 ஆம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம் திறப்பு எப்போது ? Chengalpattu New Bus Stand Opening Date
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையமா பணிகள் துவங்கப்பட்டதிலிருந்து வேகமாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு புறநகர் பேருந்து அமைக்கும் பணி தற்போது 70% சதவீதம் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையிலிருந்து செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து, தென் மாவட்டத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















