தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்த செங்கல்பட்டு.. முதலிடம் பிடித்து சாதனை.. சாதித்தது என்ன?
Chengalpattu: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வடக்கு மண்டலத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது.
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை:
இன்று தமிழ்நாட்டின் ஆண்டு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், நேற்று மாநில திட்ட குழு சார்பில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
மாநில திட்டக்குழு சார்பில் இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மண்டல வாரியாக இந்த ஆய்வு அறிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல மாவட்டங்கள்
இதில் வடக்கு மண்டலத்தில், சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் என ஒன்பது மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒன்பது மாவட்டங்களில் கடந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 5.97 லட்சம் கோடியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தனி நபர் வருமானத்தில், 6,47,962 ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் உள்ளன.
முதன்மை இடம் பிடிக்க காரணம் என்ன ?
சென்னையில் புறநகர் மாவட்டமாக செங்கல்பட்டு இருந்து வருவதால், அதிக அளவு சிப்காட், ஐடி கம்பெனிகள், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று சுற்றுலா, விவசாயம் என ஏராளமான பொருளாதார வாய்ப்புகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் குவிந்துள்ளது.
தொடர்ந்து புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருவதால், வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்த அசத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

