Fortified Rice: செங்கல்பட்டில் பிளாஸ்டிக் அரிசி; வைரலாகும் வீடியோ - அதிகாரிகள் விளக்கம்
செறிவூட்டப்பட்ட அரிசியில், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம் போன்ற சத்துக்களுடன், வைட்டபின் ஏ, மற்றும் பி1, பி2, பி6 உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் இருக்கும்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள, நியாய விலை கடையில் பிளாஸ்டிக் கலந்த ரேஷன் அரிசி விற்பதாக, பெண் ஒருவர் புகார் தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு உள்ளூர் குழுக்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மேலே குறிப்பிட்ட பெண் ஒருவர், பிளாஸ்டிக் அரிசி என சில அரிசிகளை தனியாக பிரித்து எடுத்து காட்சிப்படுத்தியுள்ளார்.
பிளாஸ்டிக் அரிசி
அந்த அரிசியை பிளாஸ்டிக் அரிசி எனவும், தண்ணீரில் ஊற வைத்தால் மிதக்கிறது எனவும் தெரிவிக்கிறார். அதேபோன்று அந்த அரிசியை பாத்திரத்தில் வைத்து வறுத்தால், கருகி விடுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வரும் நிலையில், இது குறித்து உண்மை தன்மையை அறிவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் விசாரித்தோம். இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு இருப்பது உண்மை அல்ல என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரசால் செறிவூட்டப்பட்ட அரிசியை தான் பிளாஸ்டிக் அரிசி என தவறாக புரிந்து கொண்டதாக, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ( fortified rice )
பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியை 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். செறிவூட்டப்பட்ட அரிசியில், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம் போன்ற சத்துக்களுடன், வைட்டபின் ஏ, மற்றும் பி1, பி2, பி6 உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் இருக்கும்.
இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ரசாயனங்களைச் சேர்த்துச் நுண்ணூட்டச் சத்து கலவையை உண்டாக்கி செயற்கையாக அரிசி தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த அரிசி மாவை நுண்ணூட்டச் சத்துடன் கூடிய கலவையுடன் சேர்த்து, அதில் தண்ணீர் சேர்த்து எக்ஸ்ட்ரூடர் இயந்திரம் மூலம் அரிசி மணிகளை போல தயாரித்து அதனை உலரவைத்து, செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.
அச்சப்பட தேவையில்லை
நாட்டில், இரண்டில் ஒரு பெண் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றி இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில், அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க செறிவூட்டப்பட்ட அரிசி உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசியில் சுமார் 10 கிராம் அளவிற்கு மட்டுமே இந்த அரிசி சேர்க்கப்படுகிறது. எனவே மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் நியாய விலை கடையில் , அரிசியை வாங்கிக் கொள்ளலாம், இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே விழிப்புணர்வு செய்யப்பட்டு இருந்தாலும் கூடுதலாக விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பிளாஸ்டிக் கலக்க முடியுமா ?
அரிசியில் பிளாஸ்டிக் கலந்து விற்பனை செய்வது என்பது சாத்தியமற்றது என நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பிளாஸ்டிக் மூலம் அரிசி உருவாக்கப்பட்டு அவை விற்பனைக்கு வரும் பொழுது, அதை கலப்படம் செய்வதால் வியாபாரிகளுக்கு எந்த வித லாபமும் இருக்காது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.