Nitham Oru Vaanam Review: ‘வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்’ ..அழகாக சொன்ன ‘நித்தம் ஒரு வானம்’ ..முழு விமர்சனம் இதோ!
Nitham Oru Vaanam Review In Tamil: வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Ra Karthik
Ashok Selvan, Ritu Varma, Aparna Balamurali, Shivathmika, shivada and others
கதையின் கரு:
எதிலும் 100% பெர்ஃபக்ட், சுத்தம் சுகாதாரம் என OCD பிரச்சனையுடன் வாழும் அர்ஜூனுக்கு (அசோக் செல்வன்) திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு முன்னாள் காதலன் பற்றி பேசும் மணப்பெண்ணிடம் பிராக்டிகல் ஆக சொல்வதாக கூறி பேசும் அவருடைய பேச்சுக்கள் திருமணம் நின்று போக காரணமாகிறது. இதனால் கடும் மன அழுத்ததுக்கு ஆளாகும் அர்ஜூனிடம் டாக்டராக வரும் அபிராமி இரு காதல் கதைகள் அடங்கிய டைரிகளை கொடுத்து படிக்க சொல்கிறார். அந்த இரண்டிலும் கடைசி சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு கதையிலும் உள்ள கேரக்டர்களுக்கு கடைசியில் என்ன நேர்ந்தது? அசோக் செல்வன் தன் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? என்ற கேள்விகளுக்கு நித்தம் ஒரு வானம் பதிலளிக்கிறது.
எளிதாக பொருந்தும் கதை
வித்தியாசமான கதைகள் தனக்கு என்றும் பிளஸ் என்பதை மீண்டும் ஒருமுறை அசோக் செல்வன் நிரூபித்துள்ளார். எந்த கதை படித்தாலும் அதில் வரும் ஹீரோவாக தன்னை நினைத்துக் கொள்ளும் அவரின் கேரக்டர் நிச்சயம் திரையில் நம்மை பார்ப்பது போலவே இருக்கும். அந்த வகையில் அர்ஜூன் தவிர்த்து இரு காதல் கதையிலும் இடம் பெறும் வீரா, பிரபா கேரக்டரும் அவருக்கு சூப்பராக செட்டாகி இருக்கிறது. இதுவே ரசிகர்களுக்கு படத்தை ரசிக்கும்படி வைக்கிறது. அந்த 2 கதைகளிலும் என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பை நமக்கும் தூண்டுவது சிறப்பு
படத்தில் பல கேரக்டர்கள் வந்தாலும் வீரா கதையில் மீனாட்சியாக வரும் சிவாத்மிகாவை விட, பிரபா கதையில் மதியாக வரும் அபர்ணா பாலமுரளியின் கேரக்டர் அதிகமாக நம்மை கவர்கிறது. அப்பாவுடன் மல்லுகட்டும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் ஷிவதாவின் நடிப்பும் அவர் கேரக்டரும் நம் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைகிறது. அதேசமயம் இடைவேளைக்குப் பிறகு அந்த டைரி கதைகளின் ட்விஸ்ட்கள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இன்னொரு ஹீரோயினாக வரும் ரித்துவர்மாவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
வாழ்க்கை பயணத்தின் முக்கியத்துவம்
3 விதமான கதைகள், கதைக்களங்கள் என ஒவ்வொன்றிற்கும் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும் விது ஐயனாவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. குறிப்பாக பனிமலைகளுக்கு நடுவே எடுக்கப்பட்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. கொஞ்சம் தப்பினால் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் பல கேரக்டர்களை சரியாக கதையில் கையாண்டதில் இயக்குநர் ரா. கார்த்திக் கவனம் பெறுகிறார். வாழ்க்கையின் மிக கடினமான சூழ்நிலையில் அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட நாம் செய்யும் வேலைகள், பயணங்கள் நிச்சயம் அந்த வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதேபோல் நாம் பார்க்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழும் மனிதர்களை பார்க்கும் போது நமக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்ற வைக்கும் நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறது நித்தம் ஒரு வானம் படம்.
பிளஸ் - மைனஸ்
வீரா- மீனாட்சி, பிரபா - மதி, அர்ஜூன் - சுபா கதைகளில் வரும் அத்தனை கேரக்டர்களும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளது பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இதுவே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியாக அமைகிறது.
மைனஸ் என பார்த்தால் தரண் குமாரின் பின்னணி இசை நம்மை கவர்ந்தாலும் கோபி சுந்தரின் பாடல்கள் காட்சிகளை நகர்ந்த உதவியிருக்கிறதே தவிர பெரிதாக கவரவில்லை. அதேபோல் டாக்டராக வரும் அபிராமி கேரக்டரும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. OCD பிரச்சனையை சாதாரணமாக கையாள்வது, சில உணர்வுப்பூர்வமான காட்சிகளை வசனம் வழியாக கடத்துவது போன்ற சில குறைகள் இருந்தாலும் ‘நித்தம் ஒரு வானம்’ நமக்கு ஒரு ஆச்சரியம் தான்...!