Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மம்மூட்டி நடித்து திரையரங்கில் வெளியாகியுள்ள டர்போ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
Vysakh
Mammootty , Raj B Shetty , Anjana jayaprakash
Theatrical Release
Turbo Movie Review in Tamil: மம்மூட்டி நடித்து வைசாக் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் டர்போ (Turbo). கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அஞ்சனா ஜெயபிரகாஷ் , திலிஷ் போத்தன் , சபரீஷ் வர்மா உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். டர்போ படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் கமர்ஷியல் மசாலா படங்கள்
ஒரு பக்கம் பிரேமலு , பிரமயுகம் , மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற மலையாள சினிமாவுக்கே உரித்தான படங்கள் வெளியானாலும் மறுபக்கம் ஒரு சில பக்கா வணிக ரீதியிலான படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது மலையாள சினிமாத்துறை. ஸ்லோ மோஷன் ஷாட்கள், அதே வழக்கமான கதை , பாட்டு என தமிழ் , தெலுங்கு , இந்தி படங்களில் நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன கதைகளை தங்கள் பங்கிற்கு திருப்பி எடுத்து வைக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியான ஆர்.டி.எக்ஸ் படத்தை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இந்த ஆண்டு அப்படியான ஒரு படமாக வெளியாகி இருக்கிறது மம்மூட்டியின் டர்போ.
டர்போ படத்தின் கதை
தனது ஊரில் சின்ன சின்ன வம்புச் சண்டை செய்து சுற்றித் திரிகிறார் நாயகன் டர்போ ஜோஸ் ( மம்மூட்டி ) . ஜோஸ் கட்டுப்படும் ஒரே நபர் அவரது அம்மா. மறுபக்கம் சென்னையில் , இறந்தவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி கோடிக் கோடியாக பணப் பரிவர்த்தனை செய்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து தன் கைக்குள் வைக்க நினைக்கிறார் வில்லன் ராஜ் பி ஷெட்டி. எல்லா வில்லனைப் போல் ஈவு இரக்கம் இல்லாமல் தனது எதிரிகளைக் கொள்ளக் கூடியவர் தான் இந்த வில்லனும். தனது நண்பனின் காதலை சேர்த்து வைக்க நினைக்கும் ஜோஸ் இந்த கொள்ளைக்கார கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் ஜோஸ் எப்படி காப்பாற்றிக் கொள்கிறார் என்பதை மூன்று மணி நேர படமாக எடுத்திருக்கிறார் வைசாக்.
வம்புச் சண்டையில் ஈடுபது சராசரியான நாயகன் , கொடூரமாக கொலை செய்யும் வில்லன். பிரண்ட்ஷிப் , அம்மா சென்டிமென்ட் இவற்றுடன் சேர்த்து நிறைய ஆக்ஷன் காட்சிகள் தான் டர்போ. டெம்பிளெட் கதையில் முடிந்த அளவிற்கு சின்ன சின்ன ட்விஸ்ட்களை வைத்து பார்வையாளர்களை 3 மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். ஆக்ஷன் என்றால் சாதாரண ஆக்ஷன் இல்லை உள்ளூர் ரெளடிகள் தொடங்கி வாள் வைத்திருக்கும் சாமுராய் , மிஷின் கன் வைத்திருக்கும் கேங்ஸ்டர் என எல்லா விதமான வில்லன்களும் படத்தில் இருக்கிறார்கள். எல்லாரையும் கையாலேயே அடித்து துவம்சம் செய்கிறார் மம்மூட்டி. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா என்று வாய்வரை வரும் வார்த்தை மம்மூட்டியின் குழந்தை முகத்தைப் பார்த்து சைலண்டாகி விடுகிறது.
நடிப்பு
நடிப்பு ரீதியாக மம்மூட்டி அம்மா பேச்சிற்கு கட்டுப்படும் பெரிதாக விவரம் தெரியான ஒரு அப்பாவியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.அவருக்கு தெரிந்தது எல்லாம் சண்டை மட்டும் தான். வில்லனாக வரும் ராஜ் பி ஷெட்டி ஆங்கிலமும் மலையாளமும் கலந்து பேசும் ஊபர் கூலான லுக்கில் குங்ஃபூ தெரிந்த வில்லனாக மிரட்டியிருக்கிறார். நாயகியாக வரும் அஞ்சனா ஜெயபிரகாஷ் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்கள்.
படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதில் யூகிக்கக் கூடிய காட்சிகளை சகித்துக் கொள்ள வைக்கின்றன. படத்தின் ஹீரோ அறிமுகத்திலேயே இது எந்த மாதிரியான படம் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் சர்க்கரை போட்டு மாத்திரை முழுங்குவது மாதிரி மம்மூட்டிக்காக படத்தை பார்க்க நினைப்பவர்கள் டர்போ படத்தைப் பார்க்கலாம்
கடைசியில் ட்விஸ்ட்
யாருமே எதிர்பார்க்காத ஒரேபொரு ட்விஸ்ட் படத்தில் இருக்கிறது. ஒரு வில்லனை அழித்தால் அவனை விட பெரிய வில்லன் இன்னொருவன் வரவேண்டும் இல்லையா. உருவம் வராவிட்டாலும் ஒரு குரல் வருகிறது. அது தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான ஒரு குரல் தான். இதுவும் தேவையா என்றால் இல்லைதான். ஆனால் மம்மூட்டி படமாச்சே...அதனால் தியேட்டருக்கு ஒரு விசிட் அடியுங்கள்.