WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC 2025 Points Table Updated: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சரிவை சந்தித்துள்ளது.
WTC 2025 Points Table Updated: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:
அடிலெய்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்டில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதன்படி, இந்த சுழற்சியில் அதன் ஒன்பதாவது வெற்றியுடன், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி 60.71 வெற்றி சதவிகிதத்துடன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. மறுபுறம், 2023-25 சுழற்சியில் தனது பத்தாவது போட்டியின் முடிவில், இந்தியாவின் வெற்றி சதவிகிதம் 57.29 ஆக சரிந்தது, மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா தற்போது இலங்கைக்கு எதிரான சொந்த டெஸ்டில் வலுவான நிலையில் உள்ளது மற்றும் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற முடியும்.
புள்ளிப்பட்டியல் நிலவரம்
நிலை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | புள்ளிகள் | PCT |
1 | ஆஸ்திரேலியா | 14 | 9 | 4 | 1 | 102 | 60.71 |
2 | தென்னாப்பிரிக்கா | 9 | 5 | 3 | 1 | 64 | 59.26 |
3 | இந்தியா | 16 | 9 | 6 | 1 | 110 | 57.29 |
4 | இலங்கை | 10 | 5 | 5 | 0 | 60 | 50.00 |
5 | இங்கிலாந்து | 21 | 11 | 9 | 1 | 114 | 45.24 |
6 | நியூசிலாந்து | 13 | 6 | 7 | 0 | 69 | 44.23 |
7 | பாகிஸ்தான் | 10 | 4 | 6 | 0 | 40 | 33.33 |
8 | பங்களாதேஷ் | 12 | 4 | 8 | 0 | 45 | 31.25 |
9 | வெஸ்ட் இண்டீஸ் | 11 | 2 | 7 | 2 | 32 | 24.24 |
இந்திய அணி தோல்வி:
அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வெறும் 180 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் 337 ரன்களை குவித்தது. 157 ரன்களை பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், நிதிஷ் மட்டும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 42 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 175 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் வெறும் 19 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா வலுவாக பதிலடி கொடுத்தது.
இதைதொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது.