Breast Cancer: மார்பகங்களில் புற்றுநோய் கட்டிகள்.. பரிசோதனை மற்றும் சிகிச்சை முறை.. செய்ய வேண்டியது என்ன?
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறியும் முறையும் அதற்கான சிகிச்சை முறை பற்றியும் விரிவாக காணலாம்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக மற்றும் கர்பப்பை புற்றுநோய் பொதுவானதாக மாறியுள்ளது. இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை தான் முக்கிய காரணம். இளம் வயது பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்கிறது. ஆனால் இளம் வயது பெண்களுக்கு அடர்த்தியான மார்பக திசுக்கள் இருப்பதால் இந்த புற்றுநோயை கண்டுபிடிப்பது சற்று கடினம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அவசியமான ஒன்றாக உள்ளது. மார்பக புற்றுநோய் என்பது அச்சமடைய வேண்டிய விஷயமோ, உயிருக்கு ஆபத்தான விஷயமே கிடையாது. மார்பக புற்றுநோய் முழுவதுமாக குணமடையக்கூடிய ஒன்றுதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள்:
- ஏற்கனவே மார்பக புற்றுநோய் பாதிப்பு அல்லது மார்பகத்தில் வேறு நோய் பாதிப்பு இருந்தால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
- குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவுக்கு (அம்மா, அக்கா, பாட்டி) மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்தால், பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது
- 40 வயதுக்குள் மார்பக கதிர்வீச்சு சிகிச்சை
- BRCA1 or BRCA2 என்ற மரபணு சார்ந்த மாற்றம்
- முதல் குழந்தை பெற்றெடுக்கும் போது பெண்ணின் வயது (32 வயதுக்கு மேல்), ஆகியவை ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளது.
மார்பக புற்றுநோயை கண்டு பிடிப்பட்து எப்படி?
வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் மாதம் ஒரு முறை தங்களது மார்பகங்களில் கட்டிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை வீட்டிலேயே பரிசோதித்து பார்க்க வேண்டும் என அறிவுறித்தப்பட்டுள்ளது. மேலாடையை முழுவதுமாக நீக்கி விட்டு கண்ணாடி முன் நின்று இரு மார்பகங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
பின் வலது கையை உயர்த்தி தலைக்கு பின் வைத்து இடது கையால் வலது மார்பகத்தில் சுழ்ற்சி வடிவில் அழுத்தி பார்க்கவேண்டும். அதேபோல் இடது பக்கமும் செய்ய வேண்டும். அப்படி பார்க்கும் போது வலி இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா, அக்குள் பகுதியில் கட்டிகள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். மாதந்தோறும் பரிசோதனை செய்தால் புதிய கட்டிகள் ஏதேனும் தோன்றினால் நமக்கு உடனடியாக தெரிந்துவிடும். இதுபோன்ற அறிகுறிகளுடன், மார்பக வீக்கம், பழுப்பு நிரத்தில் ஏதேனும் திரவம் கசிவது உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும் என கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி மாதவிடாய் சமயத்திலோ, மாதவிடாய் முன் அல்லது பின் பரிசோதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாயிலிருந்து 14 நாட்களுக்கு பின் சோதித்து பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மருத்துவமனைக்கு சென்று மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், அதேபோல் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துக்கொல்ல வேண்டும்.
சிகிச்சை முறைகள் என்ன?
மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் ஒருவர் Mastectomy அல்லது lumpectomy எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். Mastectomy என்பது மார்பகத்தை அகற்றும் சிகிச்சையாகும், lumpectomy என்பது மார்பகத்தில் இருக்கும் கட்டியை மட்டும் அகற்றும் சிகிச்சையாகும். லம்பெக்டோமிக்குப் பிறகு, கதிர்வீச்சு சிகிச்சை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஹார்மோன் சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை எஞ்சி இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும், மீண்டும் வருவதைத் தடுக்கவும் பரிந்துரைக்கப்படுகின்றன.
மார்பக புற்றுநோய் சிகிச்சையின் போது ஒரு பெண்ணின் பாலுணர்வு, கருவுறுதல் மற்றும் கர்ப்பம் பாதிக்கப்படலாம். சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், கட்டாயம் மருத்துவர்களிடம் கேட்டறிய வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடை, மது அருந்துதலை கட்டுப்படுத்துவது, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவு:
மெமோகிராம் எனப்படும் மார்பக பரிசோதனைக்கு ரூ. 3,500 முதல் 4,000 வரை வசூலிக்கப்படுகிறது, ஆனால் தனியார் மருத்துவமனைகளின் கட்டமைப்பை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக பரிசோதனை செய்துக்கொள்ளலாம், காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
காப்பீடு அட்டை இருப்பவர்களுக்கு சிகிச்சை முறையும் இலவசமாக வழங்கப்படுகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்துரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு முழுவது மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கான கட்டணமாக சுமார் 1.6 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல் கீமோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கும் சுமார் 1 முதல் 1.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் மார்பக புற்றுநோயின் தீவிரம் மற்றும் தனியார் மருத்துவமனை கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.