பொங்கல் திருநாளையொட்டி களைகட்டும் பனங்கிழங்கு சாகுபடி
’’புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பனம்பழத்தை விதைத்தால் மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்’’
தைப்பொங்கல் என்றாலே கரும்பும், பனங்கிழங்கும்தான் நினைவுக்கு வரும். சூரியனுக்கு படையலாக இலையில் வைக்கப்படும் கிழங்கு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்று. பனை மரத்திலிருந்து பழுத்து கீழே விழும் பனம்பழங்கள் சேகரிக்கப்பட்டு, விதைகள் மண்ணில் அடுக்காகாக அடுக்கி வைக்கப்பட்டு பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண்ணிலும் இக்கிழங்கு வளரும். இதில், செம்மண்ணில் விளையும் கிழங்கிற்கு தனிச்சுவை உண்டு.
பொங்கல் பண்டிகை நெருங்கியதை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பனங்கிழங்கு களை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்போதே பனங்கிழங்கு சீசன் களைகட்ட தொடங்கியதால் ராமநாதபுரம் பகுதியில் ஜோராக விற்பனை நடக்கிறது. ‘கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது.அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. பனை ஓலையில் கைவிசிறி தயாரிக்கலாம். கைவினை பொருட்கள் உருவாக்கலாம். வீட்டிற்கு கூரை வேயலாம். அந்த வீட்டுக்குள் வசித்தால் மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளுமையாகவும் இருக்கும். பனை நாரில் கயிறு திரிக்கலாம். கட்டில் பின்னலாம். கூடை பின்னலாம்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானம். மேலும் இதில் நிகோடிக் அமிலமும், வேறு சில சத்துக்களும் கலந்திருக்கிறது. இதனால் பதனீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம். பதனீரை இறக்கி அதை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கிறார்கள். கருப்பட்டியிலும் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பிறகு லேகியம் தயாரிக்கவும் கருப்பட்டி பயன்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைப்பதில் நாவிற்கு சுவை சேர்க்கும் மற்றொரு பொருள் நுங்கு. இதில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. நுங்கை பதனீரில் போட்டு குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும் அதிகரிக்கும். பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம்பழமாகிவிடும். இதுவும் மிகுந்த சுவையுடையது. ஏராளமான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
'பனங்கிழங்கு சாகுபடி'
மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. தென்மாவட்டங்களில் பரவலாக பனங்கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடி செய்யும் இடத்தில் பத்து அடி நீளம், பத்து அடி அகலத்துக்கு பாத்தி கட்டப்படுகிறது. அதனுள் கால் அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதற்குள் பனையில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வந்த பனம்பழ விதைகளை நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டு அடுக்குக்கு மேலேயே ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்படுகிறது. பின்னர் பாத்தி ஓரங்களில் மண்ணை அணைத்து வைக்கிறார்கள். மேல் பரப்பிலும் பரவலாக மண்ணை தூவி தண்ணீர் தெளிக்கிறார்கள். பின்னர் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வந்தால் போதும். மழை காலத்தில் பூமிக்குள் புகும் நிலத்தடி நீரை உறிஞ்சி தானாகவே கிழங்கு விளையும். பனங்கிழங்கு நன்றாக விளைச்சல் ஆவதற்கு 90 நாட்களாகும். 75 நாட்களில் முக்கால் பகுதி விளைச்சல் ஆகி இருக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பனம்பழத்தை விதைத்தால் மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
120 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் கிழங்கில் பீலி வளர்ந்து விடும். இந்த கிழங்கு சாப்பிடுவதற்கு வழு, வழுப்பாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை விளைந்த கிழங்குகளே சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் தேரி மணல் பகுதியான செம்மண் பகுதியில் விளையக்கூடிய பனங்கிழங்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த கிழங்கை பிடுங்கி அதில் உள்ள தோலை நீக்கி, பாத்திரத்தில் நீர் நிரப்பி வேகவைக்க வேண்டும். சுவைக்காகவும், கிருமிகள் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் வேகவைக்கும்போது மஞ்சள் சேர்க்க வேண்டும். மஞ்சள் பனங்கிழங்கிற்கு சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படும். நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல், சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், ஏர்வாடி அடஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்கு அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு பறிக்கப்படும் கிழங்குகள் ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பனங்கிழங்கு சீசன் துங்கியதையடுத்து, பொங்கல் பண்டிகை வருவதையொட்டியும், ராமநாதபுரத்தில் அதன் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. பனங்கிழங்கு தற்போது ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட், அரண்மனை, பாரதி நகர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஏராளமான மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா். 25 பனங்கிழங்கு கொண்ட ஒரு கட்டு 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பனங்கிழங்கின் அருமை தெரிந்தவர்கள் பணத்தைப் பெரிதாக எண்ணாமல் கட்டுக்கட்டாக தங்கள் வீடுகளுக்கும் நண்பர்களுக்கும் வாங்கி செல்கின்றனர். சத்தான இயற்கை உணவு பொருட்களை உண்ணுவோம் உடல் ஆரோக்கியத்தை பேணுவோம்.