(Source: ECI/ABP News/ABP Majha)
Urinary Tract Infection | அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? தடுப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன?
சிறுநீர் பாதை தொற்று Urinary Tract Infections (UTIs) பெரும்பாலும் பெண்களையே அதிகளவில் பாதிக்கும் தொற்றாக இருக்கிறது.
சிறுநீர் பாதை தொற்று Urinary Tract Infections (UTIs) பெரும்பாலும் பெண்களையே அதிகளவில் பாதிக்கும் தொற்றாக இருக்கிறது. இருப்பினும் ஆண்களும் இதில் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 3 சதவீதம் ஆண்கள் இதில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட ஆய்வுகளிலும், பாக்டிரியா கிருமிகள் அறிகுறியே இல்லாமல் 2 முதல் 10 சதவீதம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் என்னென்ன?
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழிக்கும் உந்துசக்தி அதிகமாக இருத்தல்
சிறுநீர் கழிக்கும்போதோ இல்லை அதன் பின்னரோ எரிச்சல் ஏற்படுதல்
லேசான காய்ச்சல்
அடர்த்தியான நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் துர்நாற்றம்
சிறுநீரில் ரத்தம் (hematuria),
சிறுநீர் பாதை தொற்றின் வகைகள்:
சிறுநீர் பாதை தொற்று இருவகைப்படுகிறது. அந்த சிறுநீர் பாதையில் எந்த இடத்தில் தொற்று உருவாகிறது என்பதைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. மேல்பாதை தொற்று எனப்படுவது கர்ப்பப்பையிலும், சிறுநீரகத்திலும் ஏற்படுகிறது. கீழ்ப்பாதை தொற்று என்பது சிறுநீர் பை, ப்ராஸ்டேட் மற்றும் யுரேத்ரா எனும் பகுதிகளில் ஏற்படுகிறது.
சிறுநீர் பாதை தொற்று ஏற்படக் காரணம் என்ன?
யுரேத்ராவில் தொற்று ஏற்பட மிக முக்கியக் காரணம் பால்வினை தொற்று. Chlamydia க்ளாமிடியா, gonorrhoea கொனோரியா ஆகிய இருவகை தொற்று பாலியல் ரீதியாக ஏற்படுகிறது. இது குறிப்பாக இளம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. அதேபோல் ப்ராஸ்டேட் எனப்படும் சுரப்பியில் ஏர்படும் தொற்றும் சிறுநீர் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாக்டீரியாக்கள் யுரேத்ராவில் வேகமாக வளரக்கூடும். ப்ராஸ்டேட்டில் எனப்படும் நோய், ப்ராஸ்டேட்டில் ஏற்படும் தொற்றால் வருகிறது. இதற்கும், சிறுநீர் பாதை தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளே இருக்கும். அதேபோல் நீரிழிவு நோயும் சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும்.
எப்படிக் கண்டறிவது?
யூரின் ருட்டீன் டெஸ்ட் எனப்படும் சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரில் பஸ் செல்கள் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சிறுநீர் பாதை தொற்றை உறுதி செய்யலாம். அதேபோல் அடிவயிற்றில் ஸ்கேன் செய்வதன் மூலமும் தொற்றை உறுதி செய்யலாம். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறியலாம்.
சிகிச்சை முறைகள்:
சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டுவிட்டால் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை செலுத்தலாம். தொற்று சாதாரண நிலையில் இருக்கும் போது இந்த மருந்துகளே தீர்வைத் தந்துவிடும். 25 முதல் 42 சதவீதம் மக்களுக்கு சிறிய அளவிலான சிறுநீர் பாதை தொற்று எவ்வித சிகிச்சையும் இன்றியே சரியாகிவிடுவதாகத் தெரிகிறது. சில நேரங்களில் கை வைத்தியமே இதனை சீராக்கிவிடுகிறது
சிறுநீர் பாதை தொற்றின் தீவிர பாதிப்பு:
ஆனால், சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீர் பாதை தொற்று தீவிரமடையலாம். சிறுநீரங்களுக்குப் பரவி பைலோநெஃப்ரிடிஸ் எனும் பாதிப்பை pyelonephritis ஏற்படுத்தலாம். இப்படி சிறுநீரகங்களில் அடிக்கடி ஏற்படும் தொற்று நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகத் தொற்று செப்சிஸ் எனும் தொற்றுக்கு வழிவகுக்கலாம். இதனால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.
சிறுநீர் பாதை தொற்றைத் தவிர்ப்பது எப்படி?
சிறுசிறு பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலமே சிறுநீர் பாதை தொற்றை தவிர்த்துவிடலாம். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அருந்தும் பழக்கமே சிறிய தொற்றுகளைத் தவிர்த்துவிடும். சிறுநீரை அடக்கிவைக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிட வேண்டும். இவற்றைக் கடைபிடித்தால் இவ்வகை தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )