Save Tigers | வனப்பாதுகாவலன்... அழிந்து வரும் புலிகள்... காப்பாற்ற வேண்டியதன் அவசியம் என்ன?
புலிகள் இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவை. அவை மனிதர்களைக் கண்டால் ஒதுங்கித்தான் செல்லும். அடர்ந்த வனப்பகுதிகளில்தான் மறைந்து, நிம்மதியாக வாழும்.
புலிகள் வளமான வனத்தின் அடையாளம். இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்காக உள்ளது. எனினும் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 127 புலிகள் இறந்துள்ளன. 2022 தொடங்கி ஒரு வாரத்துக்குள்ளாக 3 புலிகள் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 23 புலிகள் இறந்துள்ளன. இதில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. ஒரு புலி மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளது.
2021ஆம் ஆண்டில், கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அருகே சேதுமடை பகுதியில் ஒரு புலி, செப்டம்பர் மாதம் சிறுமுகை வனப்பகுதியில் ஓர் ஆண் புலி, டிசம்பர் மாதத்தில் மசினகுடியிலும் சத்யமங்கலத்திலும் 2 புலிகள் என மொத்தம் 4 புலிகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் தலா இரண்டு புலிகள் சரணாலயத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இறந்துள்ளன.
இந்தியாவில்தான் அதிக புலிகள்
நம் நாட்டில்தான் உலகின் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் 18 மாநிலங்களில் மொத்தம் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என மொத்தம் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.
1900களில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னாட்களில் புலிகள், மெதுவாக தங்களின் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. 1972-ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள் தொகைக் கணக்கெடுப்பில் வெறும் 1,872 புலிகளே மிஞ்சி இருந்தது தெரியவந்தது.
புலிகளைக் காக்கத் தனி செயல்திட்டம்
இதைத்தொடர்ந்து அழிவின் விளிம்பில் இருந்த புலிகள் இனத்தை பாதுகாக்க 1973-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் புராஜெக்ட் டைகர் (Project Tiger) என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. 1986-ல் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் புலி அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.
புலிகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டதாலும், காப்பகங்கள் உள்ளிட்ட அரசின் தொடர் நடவடிக்கைகளாலும் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தன. எனினும், நூற்றுக்கணக்கான புலிகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன.
இந்த சூழலில், புலிகள் குறித்தும், வனங்களில் அவற்றுக்கான முக்கியத்துவம் குறித்தும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கவுரவ வன உயிரினக் காப்பாளரும் மூத்த வனஉயிரிகள் புகைப்படக் கலைஞருமான நந்தினி ரவீந்திரன் 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார்.
கூச்ச சுபாவம் கொண்ட புலிகள்
''உணவுச் சங்கிலியில் முதன்மையான உயிரி புலி. ஒரு காடு செழிப்பாக இருந்தால்தான் புலிகளும் நன்றாக வாழும். புலிகள் இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவை. அவை மனிதர்களைக் கண்டால் ஒதுங்கித்தான் செல்லும். அடர்ந்த வனப்பகுதிகளில்தான் மறைந்து, நிம்மதியாக வாழும். தன்னுடைய வாழ்விடத்தை நீர்நிலைகள் அருகில் இருப்பதாகவும் இரை நிறைந்த பகுதியாகவும் அமைத்த்திருக்கும்.
அதேபோலப் புலிகள் தங்களுடைய எல்லைகளை எப்போதும் பகிர்ந்துகொள்ளாது. அந்த எல்லைகள் பாதுகாப்பு குறைந்ததாக மாறும்போது, வேறு இடத்துக்கு மாறும். சிறுநீர், கழிவுகள் மூலம் தன்னுடைய பிரதேசங்களைப் புலிகள் அடையாளமிட்டு வைத்திருக்கும்.
பிடித்த இரைகள்
புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளையே அதிகம் உண்கின்றன. அவற்றுக்குப் பிடித்த இரைகளாக பல்வேறு வகை மான்களும், காட்டுப் பன்றி, எருமை வகைகளும் உள்ளன.
புலிகளுக்கு நீர் என்பது மிகவும் முக்கியமானது. அவை இரையை உண்டபிறகு பெரும்பாலும் நீர்நிலைகளைச் சென்று படுத்துக்கொள்ளும். இல்லாவிட்டால் செரிக்காது என்றுகூடச் சொல்வார்கள். தண்ணீர் இல்லாமல் புலிகளால் இருக்கவே முடியாது'' என்கிறார் நந்தினி ரவீந்திரன்.
இறப்புக்கான காரணங்கள்
புலிகளுக்கு இடையே தங்களின் எல்லைகளுக்கான போட்டி / சண்டைதான் அவற்றின் இறப்புக்கான முக்கியக் காரணமாக அமைகிறது. இதற்குக் காடுகள் அழிப்பே முக்கியக் காரணம் என்கிறார் நந்தினி. மேலும் அவர் கூறும்போது, ''புலிகளுக்கிடையே நடைபெறும் போட்டியால் காயமடைந்துதான் அதிக அளவிலான புலிகள் இறக்கின்றன. அடுத்ததாக வயதான புலிகள் மனித வாழ்விடங்களுக்குச் சென்று பல்வேறு காரணங்களால் உயிரிழப்பது உண்டு. அதாவது வயதான மாற்றும் காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாதபோது, மனித உண்ணிகளாக மாறி இறக்கின்றன.
முன்பெல்லாம் வேட்டையாடல் காரணமாக அதிக அளவில் புலிகள் இறந்தன. இப்போது அது கட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. அரிதாகவே விஷம் அருந்தி, மின்சாரம் பாய்ந்து புலிகள் இறக்கின்றன.
புலிக்குட்டிகளின் இறப்பு வீதம்
புலிகளோடு ஒப்பிடும்போது, புலிக் குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. பெண் புலிகள் முந்தைய ஈற்றுக் குட்டிகளை ஏதாவது காரணங்களால் இழந்துவிட்டால், அடுத்த 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடும். இதனால் பெண்புலியோடு இனப்பெருக்கம் செய்யக் காத்திருக்கும் தந்தை அல்லாத பிற ஆண் புலிகள் புலிக்குட்டிகளைக் கொன்றுவிட அதிக வாய்ப்புள்ளது. இதனால் பிறக்கும் புலிக்குட்டிகளில் சுமார் 50 சதவீதம், இரண்டு வயதுக்கு மேல் உயிருடன் இருப்பதில்லை.
புலிகள் மனிதக்கொல்லிகள் அல்ல
புலியைப் பார்த்து நாம் அச்சப்படுகிறோம். நம்மைப் பார்த்து புலிகள் பயப்படுகின்றன. அரிதிலும் அரிதான புலிகளே மனிதர்களைத் தாக்குகின்றன. அவையும் வேறு ஏதோ இரை என்று நினைத்துத் தாக்கியதாகத்தான் இருக்கும். புலிகள் என்றுமே மனிதக்கொல்லி கிடையாது. வனத்தில் நம்மைப் பார்த்த நொடியே புலிகள் பெரும்பாலும் ஓடி, மறைந்துவிடும்.
அதேபோல வயதான புலிகள் மானைத் துரத்தி வேட்டையாட முடியாத நிலையில், மாடு, ஆடுகளை எளிதில் பிடித்து உட்கொள்ளும். அப்போது உட்கார்ந்த நிலையில் மானிடரைப் பார்த்தால், இரைபோலப் புலிகளுக்குத் தோன்றும் பட்சத்தில் வேட்டையாடும். மனிதன் என்று உணர்ந்தால், புலி பெரும்பாலும் அவ்வாறு செய்யாது. வயதான, காயமடைந்த டி-23 புலிக்கும் இதேதான் நேர்ந்தது'' என்று நந்தினி ரவீந்திரன் தெரிவித்தார்.
சூழல் சங்கிலி
வனங்களின் செழிப்புக்கும், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் சூழல் சங்கிலிக்கும் புலிகள் இன்றியமையாதவை. ஆனால், அவற்றின் நகம், பற்கள், தோல், எலும்பு ஆகியவற்றுக்காக வேட்டையாடப்படுவதும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், புலிகளின் வாழ்விடங்கள் சிதைவுறுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதே நேரத்தில் புலிகள் வனத்தோடு மட்டும் தொடர்புடையவை அல்ல. அறிவியல், பொருளாதார, அழகியல், பண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பு வாய்ந்தவை. உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த புலிகள், இயற்கை சூழலியல் சமநிலைக்கான ஆதாரப் புள்ளி என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.