தேவையான பொருட்கள்
அரை கப் இடியாப்பம் மாவு அல்லது அரிசி மாவு, முக்கால் கப் தண்ணீர், அரை தேக்கரண்டி உப்பு, நெய் 1 தேக்கரண்டி
இனிப்பு சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
2 கப் பால், அரை கப் தண்ணீர் +கால் கப், அரை கப் தேங்காய் பால்,அரை கப் வெல்லம், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வெல்லப்பாகை தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை கப் துருவிய வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். இப்போது வெல்லம் உருகி பாகு பதத்திற்கு வந்ததும் தீயை அணைத்து விட்டு, பாகை இறக்கி குளிர்விக்க வேண்டும்.
கொழுக்கட்டை செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும். தண்ணீரில் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலக்க வேண்டும். தண்ணீர் சூடு ஆனவுடன் அதில் மாவு சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
தொடர்ந்து விடாமல் கிளறி கொண்டே இருந்தால் தான் மாவு கட்டிப்படாமல் கடாயில் ஒட்டாமல் வரும். கோதுமை மாவை பிசைந்து வைத்ததை போன்ற பக்குவத்தில் மாவு இருந்தால் உருண்டை பிடிப்பதற்கு சரியான பக்குவமாக இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு மாவு கையினால் பிசைய கூடிய அளவுக்கு ஆறியதும் இளம் சூட்டில் 3 நிமிடங்களுக்கு மாவை பிசைய வேண்டும்.
இரண்டு உள்ளங்கைகளிலும் நெய் தடவிக் கொண்டு அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கைகளில் எடுத்து சிறிய உருண்டைகளாக உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவையும் உருண்டை பிடித்த உடன் இந்த உருண்டைகளை உலராமல் இருக்க ஈரமான துணியால் மூடி வைக்க வேண்டும்.
பின் 2 கப் பால் மற்றும் அரை கப் தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து சூடாக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்தவுடன், உருண்டைகளை மெதுவாக பாலில் சேர்க்க வேண்டும். இதை மூடி போட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
15 நிமிடத்திற்கு பின் அதனுடன் அரை கப் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இப்போது பால் தேங்காய் பால் தண்ணீர் இந்த மூன்றும் சேர்ந்து லிக்விட் பதத்தில் இருக்கும்.
இறுதியாக இந்த கலவையில் ஏலக்காய் பொடி சேர்த்து, ஆறிய வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகைச் சேர்த்து 5 நிமிடம் கழித்து உருண்டைகள் உடையாத வகையில் நன்கு கிளறி விட வேண்டும். இப்போது தீயை அணைத்து விடலாம். சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.