Video : ”புத்தக வாசனையே அலர்ஜிங்க எனக்கு...” : ஹோம் ஒர்க் செய்ய மறுத்து கம்பிகட்டிய க்யூட் சிறுவன்..
வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் சிறுவன், மூக்கில் டிஷ்யூ கொண்டு பொத்தியபடி அமர்ந்திருக்கிறார். அவரது தாய் கவனித்து என்ன பிரச்னை என கேட்கும்போது தனக்கு அலர்ஜி ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் சிறுவன்.
வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தைகள், வீட்டுப்பாடம் செய்யாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை நாம் பொதுவாக பார்த்திருப்போம். ஆனால் வீட்டுப்பாடத்தால் அலர்ஜி ஏற்பட்ட குழந்தையைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வீட்டுப்பாடம் செய்வதும், புத்தக வாசனையும் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதாக சிறுவன் ஒருவன் கூறும் க்யூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மூக்கை பொத்தியபடி ஹோம் ஒர்க்
இந்த வீடியோவில் 11 வயது சிறுவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்வதில் தனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறி அழுது நடிப்பது நெட்டிசன்களை சிரிக்க வைத்து சமூக வலைதளத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
இந்த சிறுவனின் தாய் முன்னதாக இச்சம்பவத்தை பதிவு செய்து ஆன்லைனில் வெளியிட்ட நிலையில், சீன சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலானது.
இந்த வீடியோவில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் சிறுவன், தன் மூக்கில் டிஷ்யூ கொண்டு பொத்தியபடி அமர்ந்திருக்கிறார். அவரது தாய் யூ, அதனை கவனித்து என்ன பிரச்னை என கேட்கும் போது சிறுவன் தனக்கு அலர்ஜி ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
புத்தக வாசனையால் அலர்ஜி
தொடர்ந்து என்ன ஒவ்வாமை என சிறுவனிடம் தாய் கேட்கையில், புத்தகத்தின் வாசனையால் தனக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக சிறுவன் பதிலளிக்கிறார்.
சிறுவனின் இந்த க்யூட்டான செய்கை நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும் நிலையில், யூ தன் மகனிடம் வீட்டுப் பாடத்தை முடிக்க முடியுமா என்று கேட்கிறார். ஆனால் பதில் எதுவும் சொல்லாமல் சிறுவன் அமைதியாக இருந்து தனது மூக்கில் டிஸ்யூவை சுருட்டி வைத்துக் கொண்டு தொடர்ந்து தும்மியபடி, கன்னத்தில் கண்ணீர் வழிய அழுகிறார்.
லைக்ஸ் அள்ளிய சிறுவன்
தொடர்ந்து மருத்துவரிடம் செல்ல கோரும்போது சிறுவன் மறுப்பு தெரிவிக்கிறார். அதனையடுத்து கோபமடைந்த யூ, சிறுவனிடம் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டுப் பாடத்தை தொடரும்படி கோருகிறார். சிறுவனின் இந்த க்யூட்டான நடிப்பும் இந்த செய்தியும் சீன ஊடகங்களை ஆக்கிரமித்து காண்போரை சிரிக்க வைத்து வருகிறது.
தன் மகன் இப்படி செய்வது முதல் முறையல்ல எனக் கூறும் யூ, சிறு வயது முதலே அவர் இத்தகைய கதைகளைக் கூறி வருவதாகவும் தெரிவிக்கிறார்
இந்நிலையில் சிறுவனை வளர்ந்ததும் பெரிய நடிகனாக்கும்படி கமெண்ட்ஸ் இட்டு இணையவாசிகள் ஜாலியாக களமாடி வருகின்றனர்.