Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: ஆண்களின் மனநிலை மற்றும் இயற்கையாக சிந்திக்கும் திறன் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Men Mentality: ஆண்களால் மனைவிகள் விரும்புவதை போன்று இருக்க முடியாதது ஏன்? காரணம் என்ன? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கணவன் - மனைவி பிரச்னை:
சமூகத்தில் ஆணாதிக்கம் என்பது மேலோங்கி இருந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், கல்வி பரவலானதை தொடர்ந்து ஆண்-பெண் என்ற ஏற்றத்தாழ்வு குறைந்து வருகிறது என்பதும் உண்மை தான். குறிப்பாக, ஒருகாலத்தில் சமையலறை பக்கம் எட்டிகூட பார்க்காத ஆண்கள், இன்று மனைவியுடன் சேர்ந்து சமைக்காவும், தன்னிச்சையாக சமைத்து தனது இணையரை குஷிப்படுத்தும் அளவிற்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதேநேரம், முன்பு ஆண்கள் உடல் வலிமையால் பெண்களை தங்களது கட்டுக்குள் வைத்து இருந்தனர். தற்போது அது சற்றே மாறி பெண்கள் தங்களது மன வலிமையால் ஆண்களை கட்டுப்படுத்த முயல்கின்றனர் ( இன்றைய தேதிக்கு பெரும்பான்மையான சூழலாக இருந்தாலும், இது அனைவருக்கும் பொருந்தாது என்பதை குறிப்பிடுகிறோம்). இதன் விளைவாக பல குடும்பங்களில் பிரச்னைகள் வெடிக்க தொடங்குகின்றன.
புலம்பும் கணவன்மார்கள்:
மனைவி விரும்பும்படி இருக்கமுடியவில்லை, அவரது எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ள முடியவில்லை, சின்ன சின்ன விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள், அதிகமாக யோசித்து பிரச்னையை பெரிதாக்குகிறார்கள் என, கணவன்மார்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்களிடம் புலம்புவதை கேட்டிருக்கலாம் அல்லது நீங்களே பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஒரு கட்டத்தில் மனம் விட்டு பேசிவிடலாம் என நினைத்தாலும், தங்களது வார்த்தைகள் இணையரை காயப்படுத்தி விடுமோ, தவறாக புரிந்து கொள்ளப்படுமோ என அஞ்சுகின்றனர். இதனால், அமைதியாகவே இருந்துவிடலாம் என முடிவெடுத்தாலும், தன்னிடம் பேச கூட விருப்பமில்லையா என மனைவிகள் வம்பிழுக்க தொடங்குகின்றனர் என்பதே ஆண்களின் குமுறலாக உள்ளது.
வம்பிழுக்கும் மனைவிகள்
மறுமுனையில் பெண்களோ எனக்கென நேரம் ஒதுக்குவதில்லை, எனக்காக சிந்திப்பதில்லை, வீட்டை விட்டு வெளியே சென்றாலே என்னை மறந்துவிடுகிறீர்கள், நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என பல கடினமான வார்த்தைகளையும் மிக எளிதாக கூறிவிட்டு கடந்து சென்றுவிடுகின்றனர். இது ஆண்கள் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்கிறார்களா? என்பதே கேள்விக்குறி தான். ஆனால் மனைவி எதிர்பார்த்தபடி இருக்க முடியாதது ஆண்களின் இயலாமை அல்ல. அவர்களின் இயற்கையான வடிவமைப்பே அப்படி தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஆண் எனும் படைப்பு
தாய், மனைவி அல்லது காதலியாக இருக்கும் பெண்கள், ஆண்களின் மூளையை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொண்டால், அவர்களை இன்னும் சிறப்பாக அறிந்துகொள்ள முடியும்.
- எப்படி திருமண நாளை மறந்துவிடுகிறீர்கள்? எப்படி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை கூட மறந்துவிடுகிறீர்கள் என கேள்வி கேட்கிறீர்களா? ஆண்களின் ஹிப்போகேம்பஸின் அளவு என்பது பெண்களை விட சிறியது. எனவே உணர்வுப்பூர்வமான நினைவுகளை சேமித்து வைக்கும் திறன் என்பது குறைவு. எனவே, ஒரு பெண்ணை போல கடந்த ஆண்டில் அந்த நாளில் என்ன ஆடை அணிந்து இருந்தேன் என்பது போன்ற, உணர்வுப்பூர்வமான நினைவுகளை அணுகுவதற்கான திறன் ஆண்களுக்கு மிகவும் கணிசம் தான்
- ஏதேனும் ஒரு வேலை செய்யும் நேரத்தில் இடியே விழுந்தாலும் சுற்றி நிகழும் மற்ற சம்பவங்களை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்கிறீர்களா? ஆண்கள் வேட்டையாடுபவர்களை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளனர். டனல் விசியன் (TUNNEL VISION) என்ற கூர்நோக்கும் அம்சம் அடிப்படையிலேயே ஆண்களுக்கு ஆழ் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நேரத்தில் கையிலெடுத்த ஒரு பணியை மட்டுமே சிறப்பாக செய்வார்கள். அதாவது, பெண்களை போன்று ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை கையாலும் திறன் இயற்கையாகவே ஆண்களுக்கு இல்லை.
- மனைவி அல்லது காதலிக்கு என்ன வேண்டும் என அவர்கள் சொல்லாமலே புரிந்துகொள்ளும் திறன் என்பது ஆண்களுக்கு குறைவு தான். எனவே, தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாகவே பெண்கள் உணர்த்தினால், வாழ்க்கை இன்புற்று இருக்கும்.
பொறுப்பு துறப்பு: மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் ஆண்களின் மூளை திறனை பற்றி துறைசார் வல்லுநர்கள் கூறிய கருத்துகளே ஆகும். எந்தவொரு தனிநபரையும்/பெண்களையும் குறை கூறும் நோக்கத்துடன் கருத்துகள் பதிவிடப்படவில்லை.