Heart Health : 40 வயதான பெண்களுக்கு அதிகரிக்கும் இதய நோய் பாதிப்பு.. தடுப்பதற்கான வழிமுறைகள் இதுதான்
பெண்கள் அதிக மனஅழுத்தம் ஏற்படாமலும், உணவு முறைகளை முறையாகப் பின்பற்றுவது, உடல் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகளவில் மாரடைப்பு நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இன்றைய சூழலில் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இதய நோய். குறிப்பாக இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள 30-69 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 56 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியைக் குறைப்பது மற்றும் கருப்பைகள் உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பெண்களுக்கு மாரடைப்பு அதிகளவில் ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு இதயத்தின் சிறிய தமனிகள் மற்றும் நாளங்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்நேரத்தில் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கானக் காரணம் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
இதய நோய் மற்றும் மாரடைப்புக்கான காரணம் :
உடல் பருமனாக இருத்தல், ஆண்களை விட சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும் அபாயம் அதிகம், உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது, சமீபத்திய வாழ்க்கை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் அதிக மன அழுத்தம், திடீர் மற்றும் அதிகப்படியான உடல் உழைப்பு போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது.
இதயநோயின் அறிகுறிகள்:
அஜீரணம் மற்றும் வாயு, தீவிர சோர்வு, காய்ச்சல், மார்பு மற்றும் மேல் முதுகின் தசைகளில் வலி மற்றும் இறுக்கம்
மார்பு, கழுத்து, மேல் முதுகு அல்லது தாடை வலி
வயிற்றுப்பிரச்சனை
படபடப்பு அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
கைகளில் வலி,
குறுகிய மூச்சு அல்லமு ஆழமற்ற சுவாசம்
குமட்டல், தலை சுற்றல், உடலில் குளிர்ந்த வியர்வை வெளியேறுதல்,
இதயநோய் தடுப்பதற்கான வழிமுறைகள்:
ஆண்டுதோறும் இதய ஆரோக்கிய பரிசோதனை மற்றும் கண்காணிப்பு
உடல் எடையை முறையாக பராமரிப்பு
தினமும் உடற்பயிற்சி செய்தல் அல்லது 30- 45 நிமிடங்களுக்கு வாக்கிங் மேற்கொள்ளுதல்.
கீரை, வெந்தய இலைகள், முட்டைக்கோஸ், பச்சை இலைக்காய்கறிகள், ஆரஞ்ச், பப்பாளி மற்றும் எலுமிச்சை, வாழைப்பழம் , சிட்ரஸ் நிறைந்த பழங்களை அதிகளவில் உட்கொள்ளுதல்.
பாதாம், வால்நட், பிஸ்தா, சூரியகாந்தி மற்றும் சியா விதைகள் போன்றவற்றை உட்கொள்ளுதல்.
குறிப்பாக நீரழிவு, அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக பெண்கள் அதிக மனஅழுத்தம் ஏற்படாமலும், உணவு முறைகளை முறையாக பின்பற்றுவது, உடல் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு உடல் நலத்தைப்பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.