Cold Remedies: சளி, இருமல் குணமாக உதவும் எளிதான வீட்டு வைத்தியம்!
Cold Remedies: சளி, இருமல் பிரச்சனை இருந்தால் வீட்டிலேயே செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.
மழை காலத்தில் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழை காலத்தில் தொற்று நோய்கள் எளிதாக பரவ கூடியது. வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் கை, கால் சோப்பு போட்டு சுத்தம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றிற்கு மருந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோய் தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது. ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவற்றை குணப்படுத்த முடியும். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில்,” பொதுவாக சளி பிடித்திருந்தால் அதற்கு மருந்துகள் சாப்பிடுவது அதை வெளியே வரவிடாமல் செய்துவிடும். அதற்கு பதிலாக இயற்கை முறையில் அதை குணப்படுத்த சாப்பிடுவது நல்லது.” என்று விளக்கம் அளிக்கிறார்.
View this post on Instagram
இயற்கையான முறையில் சளியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
இயற்கையாக சளி, இருமல் பிரச்சனை சரிசெய்ய முதலில் அதை கண்டறிய வேண்டும். இருமல் எதனால் ஏற்படுவது என்று காரணத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு மருந்து சாப்பிட வேண்டும்.
ஆவி பிடிப்பது:
தலையில் நீர்கோர்த்து இருந்தால், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அதை சரிசெய்ய ஆவி பிடிப்பது நல்லது. இந்த முறை எல்லாருக்கும் ஏற்றதாக இருக்காது. மூச்சுப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உகந்தது இல்லை. அதோடு, தண்ணீரில் வேப்பிலை, விக்ஸ், தைலம், உள்ளிட்டவற்றை சேர்த்து ஆவி பிடிப்பது நல்லது அல்லது. வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது நல்லது. தேவையெனில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கலாம். ஆனால், வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
உடல் சொல்வதை கவனிக்கவும்:
சளி இருக்கும்போது அதிகப்படியாக நடப்பது, உடற்பயிற்சி செய்வது,வியர்வை வரும்படி ஏதாவது செய்வதை தவிர்க்கவும். ஏனெனில், அது கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்:
இருமல், தொண்டை எரிச்சல் இருந்தால் தினமும் இரண்டு வேளை மிதமான சுடு நீரில் உப்பு சேர்த்து நன்றாக வாய் கொப்பளிக்கலாம். இது தொற்று அதிகரிக்காமல் இருக்க உதவும்.
தேன்:
தேன் சளி, இருமல், தொண்டைப் புண் ஆகியவற்றை சரிசெய்யும் திறன் கொண்டது. இஞ்சி, மிளகு, மஞ்சள், பட்டை, எலுமிச்சை சாறு சேர்ந்த தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது இருமல், சளி பிரச்சனையை சரிசெரிய்ய உதவும். இன்னொரு முறையும் இருக்கிறது. ஒரு டீஸ்பூன் தேன் அப்படியே சாப்பிடுவது நல்லது. சளி, இருமல் பிரச்சனையை குணப்படுத்த உதவும்.
கொதிக்க வைத்து வடிக்கட்டிய தண்ணீர்:
மழை காலத்தில் நன்ராக கொதிக்க வைத்து வடிக்கட்டிய தண்ணீரை குடிப்பது நல்லது. அதோடு, உடம்பு சரியில்லாதபோது நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
இவை எல்லாம் சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பின்பற்ற வேண்டியவை. தீவிரமாக நோய் தொற்று, காய்ச்சல் உள்ளிட்டவை இருப்பின் உடனே மருத்துரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏபிபி நாடு ஏற்காது.