Kitchen Tips: குமுறும் இல்லத்தரசிகள், கொதிக்கும் சமையலறைகள்..! கோடை வெயிலில் மனைவியை கூலாக்க டிப்ஸ்
Kitchen Tips in Tamil: கோடை வெப்பத்தால் கொதிக்கும் சமையலறைகளில் சூட்டை தணிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Kitchen Tips: கோடை வெப்பத்திற்கு மத்தியில் சமையலறைகளில் பணியில் ஈடுபடும் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வெப்பத்தால் கொதிக்கும் சமையலறைகள்:
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் அளவிற்கு அனல் வீசி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி, ஏசி மற்றும் மின் விசிறிகளின் கீழ் தஞ்சமடைகின்றனர். ஆனால், வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காரணம், கோடை வெயிலில் சமையலறைகள் அனல் வீசும் ஓவன்களை போன்று மாறியுள்ளன. வியர்வை மழை நீரைபோன்று கொட்டுவதாக, பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அசவுகரியமாக இருப்பதோடு, சோர்வு மற்றும் தலைவலி போன்ற உடல்நல பிரச்னைகளையும் எதிர்கொள்வதாக குறிப்பிடுகின்றனர்.
சமையலறை சூட்டை தணிக்க முடியுமா?
கேஸ் அடுப்பில் இருந்து வெளியேறும் அனலால் சமையலறை வழக்கமாகவே சூடாகத்தான் இருக்கும். குளிர்சாதன பெட்டி, ஸ்டீல் மற்றும் அலுமினிய பாத்திரங்களை சூடாக்குவதும், சமையலறையில் உள்ள காற்றை சூடாக்கி வெப்பநிலையை அதிகரிக்கிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கமும் அதிகரிப்பதால், சமையலறையின் வெப்பநிலை சமாளிக்க முடியாத அளவிற்கு உயர்கிறது. வேறு வழியின்றி அந்த இன்னல்களை சமாளித்து சமையல் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில், சமையலறையின் வெப்பநிலை பிரச்னையை ஒரே அடியாக போக்க முடியாவிட்டாலும், அதனை கணிசமாக குறைப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
சமையலறை சூட்டை தவிர்க்க ஆலோசனைகள்:
1. காற்றோட்டம்:
வெப்பநிலையை கட்டுப்படுத்த சுத்தமான புதிய காற்று சமையலறைக்குள் தொடர்ந்து வருவது மிகவும் அவசியம். எனவே வெயிலின் தாக்கம் குறைந்த மாலை நேரங்களில் சமையலறை ஜன்னல்களை திறந்துவிடுங்கள். இதனால், குளிச்சியான காற்று உள்ளே வந்து வெப்பநிலையை குறைக்கும். சீலிங், போர்டபள் அல்லது விண்டோ ஃபேன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, சமையலறையில் தொடர்ச்சியாக காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள். சமைக்கும் போது வெப்பத்தை வெளியேற்ற உதவும், எக்சாஸ்ட் ஃபேன்களை செயல்படுத்துங்கள்.
2. மின்சாதனங்களுக்கு ”நோ”
வெப்பத்தை உருவாக்கும் வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பயன்பாட்டை முடிந்தவரை பகல் நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஓவன்களை திறந்து வைப்பதை தவிருங்கள், அவை சுற்றுப்புற வெப்பத்தை விரைவாக அதிகரிக்கும். ஃப்ரீஷர் மற்றும் குளிர்சாதன பெட்டி ஒழுங்காக இயங்குவதை உறுதி செய்துகொள்ளுங்கள். சுத்தம் செய்யாமல் அதிக அழுக்கு படிந்தால், அவற்றின் காயில் கூடுதலான வெப்பத்தை வெளிப்படுத்தும்.
3. சூரிய ஒளியை தடுக்கலாம்:
திரைச்சீலைகள் போன்றவற்றை கொண்டு பகல் நேரங்களில் சூரிய ஒளி சமையலறைக்குள் நுழைவதை தடுக்கலாம். சூரிய ஒளியை தன்வழியே செலுத்தாத ஜன்னல் கண்ணாடிகள் போன்றவற்றையும் அமைக்கலாம். இதன் மூலம் சமையலறையின் வெப்பநிலை அதிகரிப்பதை குறைக்கலாம்.
4. என்ன, எப்போது சமைக்கலாம்?
மதிய உணவை முடிந்தவரை காலையிலேயே சமைத்து முடித்து விடுங்கள். இதன் மூலம் நண்பகலில் நிலவும் உச்சி வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முடியும். அதோடு, தீமூட்டி சமைக்க அவசியமில்லாத சாலட் போன்ற உணவுகளையும் அவ்வபோது முயற்சிக்கலாம். வறுப்பது, பொறிப்பது போன்ற உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் அறையின் வெப்பநிலையை கட்டுப்படுத்தலாம்.
5. சமையலறையின் நிறம்
கொளுத்தும் வெயிலிலும் சமையலறையை குளிர்ச்சியாக இருக்க, வெள்ளை நிறத்தில் வண்ணம்பூசுவது ஒரு நல்ல ஆலோசனையாக இருக்கும். அடர் நிறங்கள் மிகக் குறைந்த சூரிய ஒளியைப் பிரதிபலிக்கின்றன மற்றும் வெப்பத்தை உறிஞ்சுகின்றன. அதே நேரத்தில் வெள்ளை போன்ற வெளிர் நிறங்கள் அதிக சூரிய பிரதிபலிப்பைக் கொண்டுள்ளன. அதாவது வீட்டிற்குள் நுழையும் வெப்பத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது.
6. கூலர்ஸ்
தண்ணீர் பாட்டில்கள் அல்லது தண்ணீரை கட்டியாக உறைய செய்து அவற்றை கூலர்களாக பயன்படுத்தலாம். அதாவது உறைந்த நிலையில் உள்ள தண்ணீர் பாட்டில்கள் அல்லது தண்ணீரை சமையலறையில் திறந்தவெளியில் வைக்கும்போது, அவை உருகி காற்றின் வெப்பத்தை குறைக்க உதவும். இதனால், சமையலறையின் வெப்பநிலை குறையும்.
(பி.கு: சமையலறையில் தவிக்கும் இல்லத்தரசிகள் என குறிப்பிடப்பட்டு இருப்பது பெரும்பான்மையின் அடிப்படையில் மட்டுமே. மற்றபடி, எந்தவொரு தவறான நோக்கிலும், சிறுமைப்படுத்தும் விதமாகவும் பெண்களை மையப்படுத்தி இந்த செய்தி எழுதப்படவில்லை)

