Hair Fall Solutions: அதிகரிக்கும் முடி உதிர்தல் பிரச்னை.. குளிப்பதில் கூட கவனம் தேவை.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
பருவகாலங்களைப் பொறுத்து முடி உதிர்தல் எண்ணிக்கை இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் சற்று அதிகமாகவே இருக்கும்.

முடி உதிர்த்தல் பிரச்னை தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொது பிரச்னையாகும். பருவகாலங்களைப் பொறுத்து முடி உதிர்தல் எண்ணிக்கை இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் சற்று அதிகமாகவே இருக்கும். குளிர்ந்த, வறண்ட காற்று உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதத்தை இழுக்கும். இதனால் தலையில் உள்ள தோல் வறண்டு பொடுகு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் முடியின் வேர்கள் பலவீனமாகி முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். அதேசமயம் குளிர்காலத்தில் நாம் தொடர்ச்சியாக சூடான நீரில் குளிக்கிறோம். அதுவும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து குறைபாடும் இருப்பதால் முடி கொட்டும். இப்படி நாலா பக்கமும் இந்த பிரச்னை நம்மை நெருக்கும் நிலையில் சில வீட்டு குறிப்புகளை நாம் பின்பற்றினால் இந்த பிரச்னையில் இருந்து விடுதலை பெறலாம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
எடை குறைக்க கிரீன் டீ எடுத்துக்கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படியான நிலையில் அந்த கிரீன் டீ கவர் பயன்படுத்திய பிறகு அதனை தூக்கி எறியாமல் அதனை வெந்நீரில் போட்டு உச்சந்தலையில் தேய்க்கலாம். கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள நிலையில் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்தலை தடுக்கிறது.
அதேபோல் முடி உதிர்தல் பிரச்னைக்கு சின்ன வெங்காயம் சாறு மிகப்பெரிய அளவில் உதவும். வெங்காய சாற்றில் சல்பர் உள்ள நிலையில் இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் முடி வேர்களை வலுவாக்கி நல்ல பலனைத் தரும். வாரத்திற்கு 1 முதல் 2 முறை வெங்காய சாற்றை உச்சந்தலையில் 20–25 நிமிடங்கள் தடவி பின்னர் கழுவ வேண்டும்.
கீரை, வெந்தயம், ப்ரோக்கோலி போன்ற இரும்புச்சத்து உணவுகள், பருப்பு, சோயா, பனீர் போன்ற புரத மூலங்கள் ஆகியவையும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் கைகொடுக்கிறது. இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை வலுப்படுத்தும். மேலும் பாதாம், வால்நட்ஸ், கேரட், பீட்ரூட் காய்கறிகள், எள், வெல்லம் போன்ற ஒமேகா 3 உணவுகள், வெல்லம் போன்ற இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். இது தலைமுடியை வலிமையாக்கும்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதாக இருந்தால் தலையில் வெந்நீரை ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இது உச்சந்தலையை வறண்டு போகச் செய்கிறது. தலையில் பொடுகு போன்ற பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வழிவகை செய்கிறது. மேலும் தேங்காய் பாலில் உள்ள இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் முடியை வலிமையாக்கக்கூடியது. தேங்காய் பாலில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து தலையில் தேய்க்க வேண்டும்.





















