Valentines Day: காதலே! காதலே! உங்கள் காதல் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
Valentines Day 2024 : காதல் உறவு வலுவாக நீடிக்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த சூழல் வந்தாலும் உங்கள் காதல் உறவு நீடிக்க கீழே உள்ளவற்றை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.
அன்பின் ஒவ்வொரு வடிவமும் அழகானது. அதில் மிக அழகான வடிவம் காதல். காதலர் தினம் வரும் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக உலகெங்கும் காதலர்கள்/ தம்பதிகள் தயாராகி வருகின்றனர்.
காதல் உறவு வலுவாக நீடிக்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த சூழல் வந்தாலும் உங்கள் காதல் உறவு நீடிக்க கீழே உள்ளவற்றை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.
நம்பிக்கை:
காதல் உறவின் அடிப்படையில் அன்பு எந்தளவு ஆழமாக இருக்க வேண்டுமோ, அதே அளவு நம்பிக்கை மிக ஆழமாக இருக்க வேண்டும். உங்கள் காதல் துணையிடம் நீங்கள் எந்தளவு அன்பாக இருக்கிறார்களோ, அதைவிட நம்பிக்கையை அளியுங்கள். அப்போதுதான் உங்கள் காதல் துணை அவர்களது மகிழ்ச்சி மட்டுமின்றி, அவர்களது பிரச்சினைகளையும் உங்களிடம் நம்பிக்கையாக பகிர்வார்கள்.
பாராட்டுங்கள்:
நாம் செய்யும் சில செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைத்தாலும், மனதுக்கு பிடித்தவர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு என்பது மிக மிக தனித்துவமானது. அது அவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சின்ன, சின்ன செயல்களாக இருந்தாலும் அவர்களை தட்டிக் கொடுங்கள். அந்த சின்ன சின்ன பாராட்டு அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும். உங்கள் காதல் துணை ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால் அதை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
ரசியுங்கள்:
காதல் உறவை இன்னும் அழகாக மாற்றுவதில் ரசனையின் பங்கு மிக அளப்பரியது. காதலிக்கப்படுவதும், காதலிப்பதுமே ஒரு வித புத்துணர்ச்சியை தரும். உங்கள் காதல் துணையின் உடை, அவர்களது பாவனை, அவர்கள் ஹேர் ஸ்டைல், அவர்களது நடை என ஒவ்வொன்றையும் ரசியுங்கள். அதை அவர்களிடம் சொல்லி பாராட்டுங்கள். கன்னத்தில் விழும் குழி, சிரிப்பு, கண்கள், மூக்குத்தி, வளையல், காதணி என்று காதலன் காதலியை ரசிப்பதற்கு ஏராளமானவை உண்டு. உன்னில் இது மிகவும் அழகு என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்லும்போது அவர்களை அது இன்னும் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
உங்கள் காதல் துணை மற்றவர்கள் பார்வைக்கு அழகாக இருக்கிறார்களா? இல்லையா? என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். சமீபத்தில் பார்த்த படத்தில், மஜ்னுவிடம் லைலா அழகில்லை என்று பலரும் கூறினார்கள். அதற்கு மஜ்னு உங்கள் கண் வழியே பார்த்தால் லைலா அப்படிதான் தெரிவாள். என் கண் கொண்டு பாருங்கள். அவள் அவ்வளவு பேரழகு என்று ஒரு வசனம் இருந்தது. அதுபோல, உங்கள் காதல் துணையை உங்கள் கண் கொண்டு பார்த்து ரசியுங்கள். நிச்சயம் அவர் பேரழகாக ஜொலிப்பார்.
திணிக்காதீர்கள்:
காதல் பல சமயங்களில் முறிவுகளை சந்திப்பதற்கு ஒருவர் மீது ஒருவர் தனது சொந்த ஆசைகளை திணிப்பதே காரணமாக அமைகிறது. அதனால், உங்களுக்கு பிடித்ததை மட்டுமே உங்கள் காதல் துணை செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். அது அவர்களை காயப்படுத்துவதுடன், ஒரு கட்டத்தில் உங்களை விட்டு விலகினாலே போதும் என்ற மனநிலையை உருவாக்கிவிடும். உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வது என்பது வேறு, உங்கள் ஆசைகளை நீங்கள் திணிப்பது என்பது வேறு. அதனால், நம் காதல்துணைதானே, நம் கணவன்/மனைவி தானே என்று ஆசைகளை திணிக்காதீர்கள்.
வார்த்தை பிரயோகம்:
காதலில் வார்த்தை பிரயோகம் என்பது மிக மிக முக்கியம் ஆகும். நம் கருத்தை சொல்லும்போது அவர்களது மனம் நோகாமல் அதை சொல்ல வேண்டும். அப்போதுதான், உங்கள் காதல் துணைக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்படாது. உதாரணத்திற்கு உங்கள் காதலி நீல நிற ஆடை அணிந்து வருகிறார் என்றால், அது அவர்களுக்கு பொருந்தவில்லை என்றால் “உனக்கு இந்த ட்ரெஸ் நல்லா இல்லை” என்று கூறக்கூடாது. அதற்கு பதிலாக “நீ இந்த ப்ளூ கலர் ட்ரெசை விட ரெட் கலர் ட்ரெஸ்ல இன்னும் அழகா இருப்ப” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சொல்ல வேண்டும். அதேசமயம் அவர்களது விருப்பம் அதுவேதான் என்றால் அதற்கு சம்மதிக்கவும் வேண்டும்.
ரகசியம் பகிர்தல்:
காதல் உறவில் மிக மிக முக்கியமான ஒன்று, ஒருவரைப் பற்றி ஒருவர் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல். அனைத்தையும் நாம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. சிரித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. உங்கள் காதல் துணை மற்றவர்கள் முன்பு மகிழ்ச்சியாக, சிரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், உங்கள் காதல் துணை உங்களிடம் மட்டும் பகிர்வதற்கு என்று மனதிற்குள் சில விஷயங்களை வைத்திருக்கலாம்.
அவ்வாறு உங்கள் காதல் துணை யாரிடமும் பகிராத சில ரகசியங்களை உங்களிடம் பகிரும்போது, அதை கவனமாக காது கொடுத்து கேளுங்கள். அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் அழுதால் ஆறுதல் சொல்லுங்கள். நடந்ததை பற்றி எண்ண வேண்டாம். புதியதாக வாழ்வை தொடங்கலாம் என்று நம்பிக்கை அளியுங்கள். உங்கள் காதல் துணையின் கஷ்டங்களை நீங்கள் முழு மனதுடன் கேட்டாலே, அவர் தன் மனதில் உள்ள பாரம் குறைந்ததாக கருதுவார். அது உங்கள் மீதான அன்பை இன்னும் அதிகரிக்கும்.
கால அவகாசம்:
நீங்கள் காதலிக்கத் தொடங்கிய உடனே, உங்கள் காதல் துணை அவர்கள் பற்றிய அனைத்தையும் உங்களிடம் ஒரே நாளில் கூறிவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். இது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமண உறவிற்கும் பொருந்தும். ஏனென்றால் அவர்களது கடந்த காலம் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கலாம், சோகமானதாகவும் இருந்திருக்கலாம். அவர்கள் அதை மறக்கக்கூட முயற்சிக்கலாம்.
அதற்கு வாரங்களோ, மாதங்களோ, சில சமயங்களில் வருடங்களோ கூட அவகாசம் எடுக்கலாம். அவ்வாறு அவர் கூறும்போது நிச்சயம் கேளுங்கள். அந்த விஷயங்களில் உங்கள் காதல் துணையே தவறு செய்திருந்து, அவர் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்தால் அதில் இருந்து மீண்டு வர துணை நில்லுங்கள்.
பேசி முடிவெடுங்கள், முடிவெடுத்து பேசாதீர்கள்:
காதல் உறவை இன்னும் வலுப்படுத்த காதலர்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால் இருவரும் பேசி முடிவெடுங்கள். இருவரில் ஒருவர் மட்டும் முடிவெடுத்துவிட்டு பேசாதீர்கள். ஏனென்றால், இங்கு பேசி முடிவெடுக்காமல் முடிவு எடுத்துவிட்டு பேசுவதாலே பல உறவுகள் முறிவுகளில் முடிகிறது.
என்ன கோபமாக இருந்தாலும், என்ன சூழலாக இருந்தாலும் இருவரும் அமர்ந்து பேசுங்கள். பேசும்போது மட்டுமே தெளிவு பிறக்கும். ஏனென்றால் பேசாமலே ஒரு முடிவுக்கு வரும்போது தவறான புரிதலில் தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மோசமான சூழலில் உடன் இருங்கள்:
காதலிக்கத் தொடங்கிய பிறகு உங்கள் காதலனோ, காதலியோ ( திருமணத்திலும்) பொருளாதாரம் மற்றும் உடல்நிலையில் எப்போதும் ஏறுமுகத்துடனே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது, அவர்களுக்கு சறுக்கல்கள் வரலாம். ஏதேனும் உடல்நலக்குறைவை கூடச் சந்திக்க நேரிடலாம். அதுபோன்ற சூழலில், இருவருக்குள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு உடன் இருங்கள். ஏனென்றால், இயல்பாகவே ஒரு மனிதன் வாழ்வில் சறுக்கல்களை சந்திக்கும்போதுதான் உண்மையான ஆறுதலை தேடத் தொடங்குவான். உடல்நலக்குறைவு போன்ற சமயங்களில் ஆறுதலாக உடன் இல்லாவிட்டால், நிச்சயம் உங்கள் காதல் துணைக்கு அது உடல்நலக்குறைவை காட்டிலும் மிகுந்த வேதனையை தரும். அதனால், உங்கள் காதல் துணை சந்திக்கும் மோசமான சூழலில் பக்கபலமாக இருங்கள். அதுதான் அவர்கள் மீண்டு வர மிகுந்த உந்துசக்தியாக இருக்கும்.
நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை அஸ்திரம்:
இந்த உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தாலும் நாம் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கும் நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மிக மிக குறைவு. அதுபோன்ற நேரத்தில் நமக்கு தேவை ஆறுதலான வார்த்தைகளே. இந்த உலகில் உள்ள மிகப்பெரிய தைரியமான வார்த்தை “எது நடந்தாலும் பார்த்துக்கலாம்” என்பது போல, உலகிலே மிகப்பெரிய ஆறுதலான வார்த்தை “என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன்” என்பதே ஆகும்.
உங்கள் காதல் துணை மோசமான சூழலை எதிர்கொள்ளும்போது, அவர்கள் அதை கடந்து வர கால அவகாசம் எடுக்கும் என்றால் அதுபோன்ற தருணத்தில் நான் இருக்கிறேன் என்று உங்கள் காதல் துணைக்கு ஆறுதலாக கூறுங்கள். கூறுவது மட்டுமின்றி அந்த வார்த்தைக்கு ஏற்ப அவர்களுடன் உடன் இருங்கள். அது அவர்களுக்கு மிகுந்து புத்துணர்ச்சியை தரும்.