Women Health App | பீரியட்ஸ் தேதி மட்டுமில்ல. ஒட்டுமொத்த உடல்நிலை விவரங்களும் உங்க கைகளுக்குள்ளேயே..
முறையற்ற மாதவிலக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது. இதற்காக மாதவிடாய் கால கணக்கீட்டு செயலிகள் நிறைய சந்தைப்படுத்தப்படுகிறது.
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணில் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாதம்தோறும் சரியான சுழற்சி முறையில் இருக்க வேண்டியது அவசியம். முறையற்ற மாதவிலக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது. இதற்காக மாதவிடாய் கால கணக்கீட்டு செயலிகள் நிறைய சந்தைப்படுத்தப்படுகிறது. இவ்வகை செயலிகள் குழந்தை பெற விரும்பும் பெண்கள் , குழந்தை பெறுவதை தடுக்க விரும்பும் பெண்கள், மாதவிடாயின் முந்தைய நாட்கள் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் வலியினை கணிக்க, வெளியே செல்லும் நாட்களில் மாதவிடாய் வருகிறதா என்பதை அறிந்து கொள்வது போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் அதிக பயனாளர்களை கொண்டுள்ள செயலிகள் குறித்து பார்க்கலாம்
Clue
இந்த செயலி அமெரிக்காவை சேர்ந்த மகப்பேறு மருத்துவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனை லாக்-இன் செய்து பயனாளரின் மாதவிடாய் சுழற்சி முறை குறித்த அடிப்படை தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் துல்லியமான தகவல்களை பெறமுடியும். இது வலியின் அளவு மற்றும் PMS அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்த தகவல்களை துல்லியமாக தர வல்லது என்கின்றனர் இதன் பயனாளர்கள் . தற்போது க்ளூ செயலியானது ஐ.ஓ.எஸ் பயனாளருக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Flo
இந்த செயலியை ஆப்பிள் ஹெல்த் ட்ராக்கர் செயலியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் . இது தூக்க அளவை கணக்கிடுதல், உடலின் நீர் அளவினை கணக்கிடுதல் , உடற்பயிற்சி குறித்த அறிவுரைகளை வழங்குவதோடு கருவுறுதல் மற்றும் கர்ப்ப கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளையும் பயனாளருக்கு அளிக்கிறது. இதனை ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் பயன்படுத்த இயலாது.
Cycles
மாதிவிடாய் தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வதற்கு சிலருக்கு விருப்பம் இருக்காது. ஆனால் அடுத்த சுழற்சியின் காலத்தை அறிந்துக்கொள்ள மட்டும் ஒரு செயலி வேண்டும் என நினைப்பார்கள் அவர்களுக்கான சிறந்த செயலியாக சைக்கிள் விளங்குகிறது. PMS அறிகுறிகள் குறித்த விவரங்களையும் இது தரும் என கூறப்படுகிறது.
Eve
இந்த செயலியானது கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இது சமூக தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் குழுவாக இணைந்து மாதவிடாய் சந்தேகங்களை கேட்டுப்பெற முடியும். மாதவிடாய் சுழற்சியின் அடிப்படையில் வேடிக்கையான ஜோதிட கணிப்புகளையும் இந்த செயலி வழங்குகிறது.
MyFlo
மாதவிடாய் காலங்களில் தோன்றும் வயிற்று வலி, மன அழுத்தம், வாந்தி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளை வைத்து கற்பப்பையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை பயனாளருக்கு விளக்கும் பொருட்டு மைஃப்ளோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வலியின் தீவிரத்தை பொருத்து என்ன சாப்பிடலாம் என்பதையும் இது அறிவுறுத்துகிறது. ஆனால் இதனை இலவசமாக பெற முடியாது. இது ஒரு கட்டண செயலியாகும்
மேலே குறிப்பிட்ட செயலிகள் அனைத்தும் பெரும்பாலும் இளம் பெண்களால் பயன்படுத்தப்படுவது. இவற்றின் துல்லியம் மற்றும் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பது அதன் பயனாளர்கள் பயன்படுத்துவதைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு உடல் இயக்கமும் வித்தியாசமானது என்பதால் இதை முழுமையாக குறிப்பாக எடுத்துக்கொள்ளாமல், சில விஷயங்களை கணக்கிடுவதற்கு பயன்படுத்துவது மட்டும் எடுத்துக்கொள்வது நலம்.