Food Tips: சாஃப்டான, மொறு மொறுப்பான தட்டை... எப்படி செய்யுறது? ரொம்ப ஈசிங்க..!
சுவையான சாஃப்டான தட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை கீழே விரிவாக காணலாம்.
தட்டை நாம் எல்லோருமே விரும்பும் ஒரு ஸ்நாக்ஸ். தட்டையின் சுவை கடைக்கு கடை, பிராண்டுக்கு பிராண்ட் மாறுபடும். சில தட்டை சாப்பிடுவதற்கு சாஃப்டாக , மொறு மொறுப்பாக இருக்கும். சில தட்டை கடித்தால் ஹார்ட்-ஆக இருக்கும். அதனால் அதன் சுவை நன்றாக இருந்தாலும் நாம் அதை விரும்ப மாட்டோம். இனி நீங்க வீட்டிலேயே சுவையாக சாஃப்டான தட்டை செய்யலாம்.
சுவையான தட்டை:
முதலில் இரண்டு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பை கடாயில் போட்டு, உளுந்தின் பச்சை வாடை போகும் அளவிற்கு, வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து சிவப்பு நிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.வருத்த உளுந்தை, நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த உளுந்து மாவை, தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு, மீதியை டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இதே போல் 2 கைப்பிடியளவு பொட்டுக் கடலையை வறுக்க வேண்டாம். அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 1/2 கைப்பிடி அளவு கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து. மீதமான தீயில் 2 கப் அளவு பச்சரிசியை, ட்ரையாக வறுக்க வேண்டும். மாவில் ஈரப்பதம் இல்லாத அளவுக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும்.
செய்முறை
நன்றாக ஆறிய மாவில், அரைத்து உளுந்து மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு - 1/4 கப், மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவு, ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, தேவையான அளவு உப்பு, 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். அடுப்பில் தட்டையை பொரிப்பதற்கு சூடாக இருக்கும் எண்ணெயிலிருந்து 2 டேபிள்ஸ்பூனை மாவில் ஊற்ற வேண்டும். 2 கப் பச்சரிசி மாவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவுகளை குறிப்பிட்ட அளவுகளில் சேர்க்க வேண்டும்.
இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, பிசைய வேண்டும். இந்த மாவு கையில் ஒட்டாமல், சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவின் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் . பின் மாவை எடுத்து மீண்டும் ஒரு பக்குவத்திற்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, வாழை இலையிலோ அல்லது ஏதேனும் பிளாஸ்டிக் கவரிலோ வைத்து தட்டை வடிவத்தில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மொறு மொறுப்பான தட்டை ரெடி.