Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?
Green Dal Tadka: ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு தட்கா செய்வது எப்படி என்று காணலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்பவர்களுக்கு மதிய உணவு என்ன தயாரிப்பது என்பதை திட்டமிடுவது மிகவும் சவாலானது. உணவு ருசியாகவும் இருக்க வேண்டும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அந்த லிஸ்ட்டில் பச்சை பயறை நிச்சயம் சேர்க்கலாம். பச்சை பயறு ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள் பச்சை பயறு வைத்து உணவு தயாரித்து கொடுக்கலாம். இதில் கட்லட், தோசை, அடை, சப்பாத்தி உள்ளிட்டவற்றை செய்யலாம். முளைக்கட்டிய பயறு மட்டுமே சாப்பிட வேண்டும் என்றில்லை.
பச்சை பயறு தட்கா:
பச்சை பயறு - 250 கி
கீரை - அரை கட்டு
வெங்காயம் - 3
தக்காளி - 2
அரைத்த இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டை, பிரியாணி இலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)
கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசலா - ஒரு டீஸ்பூம்
நெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
பச்சை பயறை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைக்கலாம். பச்சை பயறு குக்கரில் வேக வைக்க வேண்டும். இதோடு, பட்டை, பிரியாணி இலை, ஒரு டேபிள் ஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு எடுக்கவும். பாலக்கீரை, அரைக்கீரை உங்களுக்கு விருப்பமான கீரையை சேர்த்துகொள்ளலாம். பாலக்கீரை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். பாலக்கீரையை சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி வைக்கவும்.
இப்போது, ஒரு கடாயில் மிதமான தீயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 4 பச்சை மிளகாய், ஒரு பிரியாணி இலை, அரைத்த இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவை சேர்த்து வதக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதங்கவிடவும். அடுத்து, மஞ்சள் தூள், தேவையெனில் கார மிளகாய் தூள், கரம் மசாலா பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வதங்கியதும் வேக வைத்த பச்சை பயறு சேர்த்து நன்றாக மசிக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து15 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் பச்சை பயறு தடுக்கா ரெடி. இறுதியாக கொத்தமல்லி உடன் சிவப்பு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்தால் ரெடி.
பச்சை பயறு புரோட்டீன், ஃபைபர் அதிகம் உள்ளது. இதில் ஃபைபர் அதிகம் இருப்பதால் செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அடிக்கடி பசி ஏற்படும் உணர்வை தராது. திருப்தியான உணர்வை தரும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதை ஊக்குவிக்கும். இதை முளைக்கட்டி தினமும் ஒரு கப் சாப்பிட்டு வரலாம். முளைக்கட்டிய பயறை வேகவைத்தும் சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் அவைக்க உதவும். இதில் ஜிங்க் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கும். இரும்புச் சத்து கிடைக்கும்.