Murungai Keerai Thuvaiyal: இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்! எப்படி செய்வது?
Murungai Keerai Thogayal: முருங்கைக் கீரை துவையல் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
தினமும் உணவில் கீரை சேர்த்துகொள்வது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ர்றனர். அந்த வகையில் வாரத்தில் ஒரு முறை முருங்கைக் கீரை சாப்பிடுவது நல்லது. முருங்கைக் கீரையில் விதவிதமாக சமைத்து சாப்பிடலாம்.
முருங்கைக் கீரை துவையல்
என்னென்ன தேவை?
முருங்கைக் கீரை இலைகள் - 2 கப்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
புளி - சிறதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - ஒரு கப்
கொத்தமல்லி இழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் உளுந்து, மிளகாய், புளி, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை முருங்கைக் கீரை உள்ளிட்டவற்றை நன்றாக வதக்கவும். முருங்கைக் கீரை கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். நைஸாக அரைக்க வேண்டாம். இதை சாதம் அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். இதே முறையில் முருங்கை பூவையும் சேர்த்து துவையல் அரைக்கலாம். இதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கும்.
முருங்கைக் கீரை அடிக்கடி கிடைக்கவில்லை என்றாலும் செய்வது சுலபமாக இல்லை என்றாலோ, இட்லி பொடி அரைக்கும்போது முருங்கைக் கீரை சேர்த்து கொள்ளலாம். தனியாக முருங்கைக் கீரை பொடியாக செய்து வைக்கலாம். சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவற்றிற்கு சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முருங்கைக் கீரை பொடி சாதம் செய்யும்போது அதில் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து செய்யலாம் ஆரோக்கியமும் கூடும். சுவையாகவும் இருக்கும்.
முருங்கைக்கீரை பக்கோடா
ஒரு பவுலில் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை எடுத்து கொண்டு அதனுடன், கடலை மாவு, அரிசி மாவு, கான்ஃபிளார் மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன், காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி மற்றும் மஞ்சள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கரண்டி சூடான எண்ணெயை அந்த கலவையில் ஊற்றி அதன் மீது கொத்தமல்லியை தூவி நன்றாக தண்ணீர் இல்லாமல் பக்கோடா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள முருங்கைகீரை கலவையை பக்கோடா போல் சிறியதாக பிடித்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும். முருங்கைகீரை பக்கோடா எண்ணெயில் வெந்ததும் எடுத்து மாலைநேர ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இந்த முருங்கை கீரை பக்கோடாவை சாம்பார் உள்ளிட்ட சாப்பாட்டிற்கு சைட்டிஷாகவும் சாப்பிடால் சுவையாக இருக்கும். முருங்கைக் கீரையை சாம்பார் உள்ளிட்டவற்றிலும் சேர்த்து செய்யலாம். இல்லையெனில், முருங்கைக் கீரை சூப் செய்து சாப்பிடலாம்.
முருங்கைக் கீரை சூப்
முருங்கைக் கீரையை காம்புகள் எதுவும் இல்லாமல் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். குக்கரில் 2 டேபில்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெண்ணெய் உருகிய பின் அதில் சீரகம் மற்றும் நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசனை போன பின் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே வதங்கிய பின் தக்காளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு மசியும் அளவு நன்கு வதக்க வேண்டும். பின் சுத்தம் செய்த முருங்கைக் கீரை சேர்த்து மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதங்கிய பின் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி 2 அல்லது 3 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
பின் குக்கரின் ப்ரஷர் முற்றிலுமாக இறங்கிய பின் அதில் இருக்கும் தண்ணீர் தனியாக வடிகட்ட வேண்டும். 1 ½ வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் வடிகட்டிய சூப் தண்ணீரை சாதம் அல்லது சூப்பாக கொடுக்கலாம். இல்லையென்றால் வடிக்கட்டிய பின் அந்த முருங்கை கீரை, வெங்காயம், தக்காளி கலவையை மிக்ஸியில் மை போல் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கலவையை வடிகட்டிய சூப் தண்ணீரில் சேர்த்து கொடுக்கலாம்.