Butter Milk Kuzhambu : இஞ்சி, சீரக சுவையோட மோர் குழம்பை இப்படி செய்து பாருங்க.. கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!
வழக்கம்போல் இல்லாமல் மோர் குழம்பை இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. மிகவும் சுவையாக இருக்கும்.
வழக்கமாக சிம்பிளாக செய்யும் மோர் குழம்பு போர் அடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் மோர் குழம்பு சாப்பிட ஆசையா? அப்போ இந்த முறையில் மோர் குழப்பு செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. வாங்க சுவையான மோர்குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் – அரை லிட்டர், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, வர மிளகாய் -2, கடுகு -அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு.
செய்முறை
2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அரை லிட்டர் தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக ஒரு முறை அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பையும் சேர்க்க வேண்டும். சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கு இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1 டீஸ்பூன் சீரகம், 2 காரமுள்ள மீடியம் சைஸ் பச்சை மிளகாய் ஆகியவற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு காரம் கூடுதலாகவோ குறைவாகவோ வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மிக்சி ஜாரில் சேர்த்த இவை அனைத்தையும் மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த விழுதை மோருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மோர்க்குழம்புக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் இதில் சேர்த்தால் போதும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு சேர்த்து, பொரிந்ததும், வெந்தயம் , ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வரமிளகாய் இரண்டை இதனுடன் கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் குழம்பிற்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தீயை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மோரை இதில் சேர்த்து கொதி விட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான மோர் குழம்பு ரெடி.