Madurai Kari Dosai : மணக்க மணக்க மதுரை கறி தோசை வீட்டிலேயே சாப்பிடணுமா..? இதுதாங்க ரெசிபி
Madurai Kari Dosai : கறி தோசை அப்படிச் சொன்னவுடன் நினைவில் வருவது மதுரை தானே. ஆம் சரியாகத்தான் உங்கள் நினைவு உங்களை கூட்டிச் செல்கிறது.
கறி தோசை அப்படிச் சொன்னவுடன் நினைவில் வருவது மதுரை தானே. ஆம் சரியாகத்தான் உங்கள் நினைவு உங்களை கூட்டிச் செல்கிறது. ஆரம்பத்தில் ஒரு கடை மட்டுமே அந்த டிஷ்ஷை உரிமை கொண்டாடிக் கொண்டிருக்க இப்போது மதுரையில் ரோட்டோரம் இருக்கும் சிறு கடையில் கூட கறி தோசை ரெஸிபி வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் வெளியூர்களில் மதுர கறி தோசை என கடை பெயர் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். மதுரை மல்லி, மதுரை ஜிகர்தண்டா, மதுரை புரோட்டா சால்னா வரிசையில் இப்போது இந்த கறி தோசையும் சேர்ந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.
இந்த கறி தோசையை எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?
மட்டன் கொத்து கறி - 200 கிராம்
தோசை மாவு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
முட்டை - 3
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு,- அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கொத்துக்கறியை நன்றாக அலசிக் கொள்ளவும். பின்னர் அந்தக் கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக வெந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அடுத்தக்கட்டத்திற்குச் செல்லவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, முட்டையை அடித்து வைக்கவும். இந்தக் கலவையில் உப்பு சேர்க்க வேண்டாம். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும். அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்.
மசாலா தயாராகிவிட்டது. இப்போது தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும். அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு மேல் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை இறக்கி பறிமாறலாம்.
கீழே தோசை அப்புறம் முட்டை மேலே கொத்தக்கறி கூட்டு அதற்கும் மேல் தோசை என அட அட அட பீட்சாவெல்லாம் எதுக்குங்க... விட்டுத்தள்ளுங்க கறி தோசா ட்ரை பண்ணுங்க