KolaPasiSeries 22 : இலங்கை தமிழர் உணவுகள் : நீத்துப்பெட்டிகள் சுமந்து சென்ற மண்ணின் வாசனை
இலங்கையில் வாழும் தமிழர் - சிங்களர் இருவருக்குமே அரிசி தான் பிரதான உணவு, அதிலும் சிவப்பு அரிசி புழுங்கல் தான். அரிசிச் சோறும், இட்லி, தோசை,அரிசி மாவிலான புட்டும் இவர்களின் விருப்ப உணவாகவும் இருக்கிறது
கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் நமக்கு கிடைத்த போது இந்த நிலப்பரப்பில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே இயக்கர், நாகர் வசித்ததற்கான ஏராளமான சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளது. சமண - பவுத்தம்- தமிழர் என்று இந்த நிலத்தில் பல்வேறு தொன்மமான நினைவுச்சின்னங்கள் இந்த நிலத்தில் கிடைத்தபடி உள்ளது. இருப்பினும் இவைகளை எல்லாம் விட என்னை ஈர்ப்பது பலாங்கொடை மனிதன் ( Balangoda Man) எனும் 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையில் காணப்பட்ட புது மனித இனத்தினன் (Homo sapiens) உடற்கூற்றியல் எச்சங்கள் தான். இலங்கைக்குப் பல முறை பயணித்தும் இன்னும் பலாங்கொடை மனிதனின் எச்சங்களைக் காண வாய்க்கவில்லை. வரலாற்று நிலங்கள் யாவுமே உணவின் பரிணாமத்தையும் சுமந்த நிலங்கள் தானே. இலங்கைக்கு நான் பலமுறை பயணித்திருக்கிறேன், இந்தப் பயணங்களில் தான் விரிவாக இலங்கையின் நிலப்பரப்பெங்கும் உள்ள உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பே மதுரையில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அகதிகள் முகாமின் வழியே தான் இலங்கை உணவுகள் எனக்கு முதல் முதலாக அறிமுகமாயின. இலங்கையின் உணவு என்பது நிலத்திற்கு நிலம் வேறு வேறாக உள்ளது என்பதை என் பயணம் எனக்கு அறியத்தந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, கண்டி, மன்னார், மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பட்டு, ஒட்டமாவடி, பதுளை, எல்ல, ரத்தினபுரா என நான் சென்ற ஊர்களில் எல்லாம் உணவுகளில் பல்வேறு வகைகளைக் காண முடிந்தது. இடியப்பம், அப்பம், இட்லி என்பவை தெற்கே வர வர இடியாப்பம், ஆப்பம், இட்டலி என உச்சரிப்பிலும் மாறுகிறது, ருசியும் மாறுகிறது. பொதுவாக இலங்கையில் சைவ உணவு வகைகளை மரக்கறி உணவு என்றும், அசைவ வகைகளை மச்சச் சாப்பாடு என்றும் அழைக்கிறார்கள்.
இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், ஒல்லாந்தர்களும் இவர்களின் உணவுகளின் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறார்கள். அரேபிய வணிகர்கள், பயணிகளும், இடம் பெயர்ந்து இலங்கையில் குடியேற்றம் பெற்ற பல சமூக மக்களும் இலங்கையின் உணவிற்கு தங்களின் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள்.
இலங்கையில் வாழும் தமிழர், சிங்களர், இலங்கை இஸ்லாமியர்கள், மலாய் இஸ்லாமியர்கள், போரா இஸ்லாமியர்கள், மோமோன் இஸ்லாமியர்கள் அனைவருக்குமே அரிசி தான் பிரதான உணவு, அதிலும் சிவப்பு அரிசி புழுங்கல் தான். கேரளத்திலும் சிவப்பு அரிசி புழங்குல் தான் அவர்களின் பிரதான சாப்பாடு என்பது இங்கே நினைவுக்கு வருகிறது.
அரிசிச் சோறும், இட்லி, தோசை, அரிசி மாவிலான புட்டும் இவர்களின் விருப்ப உணவாகவும் இருக்கிறது. இதே அரிசி மாவினால் செய்யப்படும் அப்பம், முட்டை அப்பம், வெள்ள அப்பம், பால் அப்பம் என இவற்றின் ருசியே தனி ருசிதான். அதிலும் இந்த முட்டை அப்பமும் கொஞ்சம் வெங்காய சம்பல் அல்லது சீனிச் சம்பல் இருக்கிறதே இதை எழுதும் போதே கிடைத்து விடாதா என்று பெரும் ஏக்கம் இப்பவே எழுகிறது.
அரிசி மட்டுமின்றி இங்கே தினை, சாமை, குரக்கன் (கேழ்வரகு), வரகு என சிறு தானியங்களும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அரிசிச் சோற்றுக்குப் பருப்பு கடையல், குழம்புகள், வரட்டல் தூள் கறிகள், பால் கறி, வறை, துவையல், பொரியல், சம்பல், தீயல், ஊறுகாய் என பெரும் அணிவகுப்பு தான் அவர்களின் விருந்துகளில் கிடைக்கும். சொதி என்பதே எனக்கு எப்பொழுதும் ஒரு கொண்டாட்ட மனநிலையைக் கொடுக்கும். இலங்கையில் நான் சொதியைச் சோற்றில் போட்டுச் சாப்பிட்டவுடன் மனதில் திருநெல்வேலி சொதியுடன் என் நாவில் ஒரு போட்டி தொடங்கியது. உணவின் நினைவு சும்மா விடுமா, போட்டி பலமாக நடைபெற்றது. இலங்கையில் சொதியுடன் வைக்கப்படும் சம்பல் இந்த மொத்த உணவிற்கே வேறு வித தனித்த ருசியைத் தந்து, போட்டியில் யாழ்ப்பாண சொதி வென்றது.
மரவள்ளிக் கிழங்கை உப்பும் மஞ்சளும் சேர்த்து அவித்து தேங்காய்ப்பூவுடனோ சம்பலுடன் சாப்பிடுவார்கள். இது காலை உணவாக உண்ணப்படுகிறது. யாழில் கிழங்கை அவித்து உப்பு, எண்ணெயில் லேசாக வறட்டிய காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு எல்லாம் சேர்த்து உரலில் இடித்து பந்து போல் உருட்டி செய்யும் மரவள்ளி சம்பல் ருசியான ருசி. யுத்த காலங்களில் பலரது வயிறு வாடாமல் இருப்பதில் மரவள்ளி தான் பெரும் பங்காற்றியது.
சம்பல் என்பது அவர்களின் பலம் என்பேன். பொதுவாகச் சம்பல் தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து இடிக்கப்படும். சம்பல் இடிப்புக்கே தனித்த மர உரல்கள், மர உலக்கைகள் அங்கே ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. இடிசம்பல் (இடித்த சம்பல்), அரைத்த சம்பல், தேங்காய்ச்சம்பல், கத்தரிக்காய்ச் சம்பல், மாங்காய் சம்பல், சீனிச் சம்பல், செவ்வரத்தம்பூச் சம்பல், வல்லாரைச் சம்பல், கீரைச் சம்பல், கறிவேப்பிலைச் சம்பல் என எத்தனை வகைகள் இருந்தாலும் நன்கு இடித்த மாசிக்கருவாட்டுச்சம்பலுக்கு ஈடுயிணையில்லை. மாசிக் கருவாட்டில் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் மாசிக் கருவாட்டுச் சம்பல் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்பேன். மாலத்தீவிலும் இலங்கையிலும் மட்டுமே மாசிக் கருவாட்டை அவர்கள் தங்களின் கைப்பக்குவத்திலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கடற்கரைகளில் வெயிலில் உலர்த்தப்படுகிற கருவாடுகள் நிரம்பிய கப்பல்கள் யாவையும் இலங்கை நோக்கியே பயணமாகின்றன என்றால் மிகையில்லை.
இலங்கையில் வடக்கே செல்லச் செல்ல பனை மரங்கள் வானுயர நிற்பதைக் காண்பீர்கள், பனை இந்த மக்களின் வாழ்வில் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளது என்பதையும் உணரலாம். பனம்பழமும், பனங்கிழங்கும் இங்கே அதிகபட்சமாகக் கிடைக்கிறது. பனம்பழத்தைப் பிழிந்து அதனை வெயிலில் காய வைத்து அதைப் பனாட்டாக மாற்றி வருடம் எல்லாம் பாவிக்கிறார்கள். இதே போலப் பனங்கிழங்கையும் நெடுக்கு வட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கை ஒடியல் என்கிறார்கள். ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் ஒடியல் கூழ் இங்கே மிகவும் பிரபலமான உணவு. கிராமத்திற்குக் கிராமம் இந்த ஒடியல் கூழின் சேர்மானங்கள் மாறுபடும், ருசி மாறுபடும். இந்த ஒடியல் கூழை பனை ஓலையில் தான் பருக வேண்டும். நிச்சயம் ஒடியல் கூழை பருகிப்பாருங்கள், அவசியம் ஒடியல் பிட்டு ஒரு கை சாப்பிட்டு பாருங்கள். ஒரு நல்ல நண்பர் மனம் வைத்தால் உளுந்து, கித்துள் பதநீர் ஆகியவற்றினால் செய்யப்படுகின்ற உந்து வலலு சாப்பிட்டுப் பாருங்கள்.
போர்த்துக்கீசியர்கள் அறிமுகம் செய்த மா (மா என்றால் மைதா மாவு) வில் செய்யப்படுகிற பாண் என்கிற இவர்களது ரொட்டி அங்கே மிகவும் பிரபலம். பாண், ரோஸ்(ட்) பாண், சீனிப் பாண் என்று இந்த ரொட்டிகளின் மணம் இருக்கே அப்படியே கமகமக்கும். இன்றைக்கும் என் வீட்டு அருகில் இருக்கும் அகதிகள் முகாமில் பாண், ரோஸ் பாண், சீனிப்பாண் கிடைக்கும். பாண் குழம்புடன் அற்புதமாக இருக்கும் அல்லது எங்கள் அம்மா பாணுக்கு என்றே பிரத்தியேகமாகச் செய்யும் முட்டை-தக்காளி-வெங்காயம் இணைத்த பொறியலுடன் சாப்பிட உங்கள் அனைவரையும் எங்கள் வீட்டிற்கு அழைக்கிறேன், ஒவ்வொரு ஞாயிறு இரவும் எங்கள் வீட்டில் இது தான் உணவு. அசைவம் உணவுகளை பொறுத்த மட்டில் இலங்கையில் மீன், கருவாடு, மாட்டிறைச்சி, கோழி தான் அவர்களின் பிரதான கறிகள். ஆட்டிறைச்சியை இருக்கிறது ஆனால் அதன் விலையை கேட்டுபோது தலைசுற்றியது.
தமிழகத்தின் பரோட்டா போல் இலங்கையிலும் ரொட்டி பிரபலம். கிழக்கில் கொளும்பிலும் காலை உணவாகவே மரக்கறி ரொட்டி / மீன் ரொட்டி, மாட்டிறைச்சி ரொட்டி என முக்கோண வடிவில் ரொட்டிகள் கிடைக்கும். வெறும் ரொட்டியாக காத்தங்குடிக்குச் சென்று இஸ்லாமியர்களால் அங்கிருந்து கொத்து ரொட்டியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று கொத்து ரொட்டி இன்று பல வகைகளில் அங்கே கிடைக்கிறது. பீஃப் கொத்து, சிக்கன் கொத்து, கடல் உணவுகள் கொத்து அல்லது எல்லாம் கலந்த மிக்சட் கொத்து என கொத்து ரொட்டி இல்லாமல் இலங்கையின் வானம் இருள்வதில்லை. கொத்து ரொட்டி இலங்கையின் தேசிய உணவாகவே அறிவிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. காத்தங்குடி, அக்கரைபட்டு கடற்கரைகளில் வடைகள் பரிணாம வளர்ச்சி பெற்றன. வடை, தயிர் வடை , மோர் வடை, பருப்பு வடை , உளுந்த வடைகள் பொதுவாக இலங்கையில் கிடைகும், அறிந்திருப்பேர்கள். ஆனால் இஸ்லாமியர்கள் இந்த வடை என்கிற பண்டத்தின் மரியாதையை வானுயர உயர்த்தியிருக்கிறார்கள். மீன் வடைகள், நண்டு வடைகள், இறால் வடைகள் என சுடச்சுட அடடா அடடா.. நாவில் எச்சில் ஊறுகிறதே. நான் இந்த கடலுணவு வடைகளின் பெரும் ரசிகன். இந்த வடைகளை நான் கொளும்பு கடற்கரையில் (sea front) சாப்பிட்டு மீட்படைந்திருக்கிறேன்.
இலங்கையின் மற்றும் ஒரு அற்புத உணவு இடியாப்பம். ஆப்பத்தை, இடியாப்பத்தைப் பார்த்து அசந்து போன ஐரோப்பியர்கள் அதன் மீது காதல் வயப்பட்டார்கள், அதனை தங்களின் குடும்பத்தில் இணைத்துக் கொண்டு ஆப்பத்திற்கு ஹாப்பர்ஸ் என்றும் (hoppers), இடியாப்பத்திற்கு ஸ்ட்ரிங் ஹாப்பர்ஸ் (string hoppers) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். முட்டை ஆப்பத்தைச் சுடச்சுட சாப்பிட்ட ஐரோப்பியர்கள் இதற்காகவே இங்கே இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள். அரிசி மாவு மற்றும் கேழ்வரகு மாவில் அங்கே இடியாப்பம் செய்கிறார்கள். இடியாபத்திற்கு சொதி, மீன் குழம்புகள், சம்பல் என பல காம்பினேசன்கள் உள்ளது. இதே இடியாப்பத்தில் மீன் கொத்து, சிக்கன் கொத்து என வேறு வேறு இடியாப்பக் கொத்துகள் கிடைக்கிறது. சமீபகாலமாகத் தமிழகத்திலும் இடியாப்ப பிரியாணி, இடியாப்பக் கொத்து கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்று ஐரோப்பியர்கள் அங்கிருந்து கிளம்பும் போது பல ஆப்ப இடியாப்ப எக்ஸ்பர்டுகளை தங்களுடன் குடும்பம் குடும்பமாக அழைத்துச் சென்றார்கள் என்பது வரலாறு.
இலங்கையின் போரா இஸ்லாமிய சமூகத்தின் விருந்தோம்பல் ஒரு “தால்” மீது நடைபெறுகிறது. ஒரு சிறு மேசையின் மீது பெரிய வட்ட தட்டு அதில் தான் அவர்கள் விருந்தை பரிமாறுகிறார்கள். ஒரு தட்டில் ஐந்து-ஆறு பேர் கூட்டாக உணவு சாப்பிடுகிறார்கள். மலாய் காஜா, தால் சவல் பலிது, புளித்த அரிசி மாவு ரொட்டி, படாடா சாப் எனும் ஆட்டிறைச்சி உருளைக்கிழங்கு கட்லட், புரியாணி, இறுதியாக சூபில் அல்லது கஸ்டர்ட் போன்ற இனிப்புகளுடன் இனிப்பு பீடாவுடன் விருந்து நிறைவுருகிறது. கண்டியில் புளச்சிக்காய், பழா பிஞ்சுக்கறி ரொம்ப பிரசித்தம், கிடைத்தால் அவசியம் ருசித்துப் பாருங்கள். கிழக்கில் குளத்துமீன், ஆற்றுமீன், கடல்மீன் என்கிற மூன்று வகை மீன்களும் கிடைக்கும். தனியா மீன் கறி, ஒட்டி மீன் கறி, கொடுவா மீன் கறி, சூளைமீன் கறி என பல வித மீன்கறிகள் உண்டு. மிளகு தண்ணி விசேடமான ஒரு கறியாக இங்கே கருதப்படுகிறது. செத்தல்மீன், கிழக்கன்மீன், திரளிமீன், பாற்சுறா போன்றவை மிளகு தண்ணி வைக்க பயண்படுத்தப்படுகிறது. மிளகுதண்ணியும் சோறும் மதிய உணவாக குழந்தை பெற்ற தாய்மாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்தேன்.
மட்டக்களப்பில் இருள் சூழும் நேரத்தில் கடற்கரையில் தண்ணீருக்குள் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட மேசையின் அமர்ந்து அவர்கள் இறால் பிடிப்பதை நெருங்க நின்று பார்த்திருக்கிறேன். மட்டகளப்பின் வெள்ளை இறால் சொதி பேமஸ், அப்படியே கொஞ்சம் சுற்றினால் மாங்காய் சம்பல், ரின் மீன் குழம்பு, கோதுமை பக்கோட்டா, இறைச்சிப்பிரட்டல், முட்டைவண் என உணவு வகைகளுக்கு பஞ்சமில்லை. சோளான் குலை, மரவள்ளிகிழங்கு, பனங்கிழகு போன்றவற்றை சுட்டு உண்ணுகிறார்கள். மீன்சினைகளை வாழ்கை இலையில் சுற்றி சுடுசம்பலுள் வைத்து சுட்டு உன்னுகிறார்கள். முசுட்டை, காரை, கானாந்தி, முருங்கைக்கீரை, திராய், அகத்தி, குறுஞ்சா, குமுட்டி, மாங்குட்டி, பாற்சொத்திக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, முடக்கொத்தான், தகரை, வள்ளல்கீரை (கங்குன்) பொன்னாங்காணி, வல்லாரை, சிறுகுறுஞ்சா, சுரைத்தலைப்பு போன்ற கீரை வகைகள் தனியா கவும், கலவனாகவும் (பல கீரைகள்) சேர்த்து இலைக்கறி என்ற பெயரில் உண்ணுகிறார்கள்.
பூசனிக்காய் பிஃப் கறி, கிரி பாத் என்கிற தேங்காய் பால் சோறு, கொட்டு கொல சம்பல், அம்புல் தீயல், கிரி சொதி, பொல் சம்பல் என திரும்பிய பக்கமெல்லாம் உங்களுக்கு புதிய புதிய உணவுகள் காத்திருக்கின்றன. இஸ்லாமியர்களின் புரியாணி (நம் ஊர் பிரியானி அங்கே புரியாணி என்று அழைக்கப்படுகிறது) ஒரு விசேஷச் சாப்பாடு. இஸ்லாமியர்கள் இலங்கையின் உணவுகளை பெரும் வண்ணமயமாக மாற்றியிருக்கிறார்கள். அலுவா, சர்பத், வட்லாப்பம் என இனிப்புகளிலும் இவர்கள் பங்கு முக்கியமானது.
மலாய் சமூகத்தினரால் இங்கே அறிமுகம் செய்யப்பட்ட பாபத், நாசி கோரேங், மீ கோரேங். சீனர்களால் அறிமுகம் செய்யப்பட்ட சீன மிளகாய் கூழ், ஒல்லாந்தர்களால் அறிமுகம் செய்யப்பட்ட லம்ப்ரைஸ், அரேபியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட வட்டாலப்பம் என உணவு வகைகளுக்குப் பஞ்சமில்லை. இலங்கையில் காலை 10 மணிக்கு மேல் நீங்கள் ஒரு தேநீர் அருந்த ஏதேனும் ஒரு உணவகத்திற்குச் சென்றால். உங்களிடம் தேநீர் ஆர்டர் எடுக்க வருபவர் கையில் பெரிய தாம்பாள அளவு தட்டை மேசையில் வைத்து விட்டுச் செல்வார். பட்டிஸ், சமோசா, வடைகள் என பல வகையான இனிப்பு கார வகைகள் அதில் அணிவகுத்து நிற்கும், இவைகளை short eats என்று அழைக்கிறார்கள். நீங்கள் வெறும் தேநீருடன் கிளம்ப வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தாலும் உங்கள் விரதம் முறிவது உறுதி. இந்த short eats-அய் பற்றி எழுதும் போது எனக்கு நாங்கள் Point Pedro என்கிற பருத்தித்துறையில் ருசித்த பருத்தித்துறை வடை (நம் ஊர் தட்டை) ஞாபகத்திற்கு வருகிறது.
ஈழத்தமிழர்கள் உலகம் எங்கும் புலம் பெயர்ந்தாலும் சொந்த ஊரின் உணவுகளை, சமையல் முறைகளை இறுகப் பற்றி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உணவு என்பது ஒரு படிமம் போல் அவர்களின் உணவு மேசையில் மிளிர்கிறது. அது உணவு மட்டும் அல்ல அந்த உணவுக்குள் திருவிழாக்கள், உறவினர்கள் - நண்பர்களின் நினைவுகள் பேச்சொலிகள், நினைவில் தங்கும் கணங்கள் என ஓராயிரம் துகள்கள் பொதிந்து மிளிர்கிறது. ஈழத்தமிழர்கள் பலர் தங்களின் கடவுச் சீட்டுக்கு இணையாக தங்கள் கைகளில் நீத்துப்பெட்டியை ஏந்தியே சென்றார்கள், நீத்துப்பெட்டிகள் மண்ணின் வாசனையைச் சுமந்து உலகம் எங்கும் சென்றன. அல்வா, தொதல், புஷ்னாம்பு, அஸ்மி, பால் டொபி என இனிப்புகளுக்கும் அங்கு பஞ்சமில்லை. என் இலங்கைப் பயணங்கள் விசேஷமா இருக்கும், அதிலும் ஒரு வட்லாப்பம் கைக்கு வரும் போது அது அதிவிசேஷமாக மாறிவிடும். என் ஒவ்வொரு இலங்கைப் பயணத்தையும் ஒரு வட்லாப்பத்துன் முடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
இலங்கை மொத்தமும் சுற்றிய பிறகு அந்த உணவுகள் தமிழகத்துடன் தொடர்புடையவையா என்று என் மனதில் பெரும் கேள்வி எழுந்தது, கேரளா வந்து மல்லுக்கு நின்றது. மலையாளிகளின் ஆப்பமும் புட்டும் இடியாப்பமும் கடலக்கறியும் முட்டையாப்பமும் அணிவகுத்து ஒரு புறம் நின்றன. நாகர்கோவிலின் புட்டும் ஆப்பமும், திருநெல்வேலியின் சொதியும், கீழக்கரையின் சம்பலும், தொதலும் வட்லாப்பமும் நாங்கள் இருக்கிறோம் என்று கர்ஜித்தன. இந்த கட்டுரையை எழுதும் போதே அருகில் தேங்காய்ப் பால் சொதியும் கருவாட்டுச் சம்பலும், ஊரரிசிமா இடியாப்பத்துடன் பிசைந்து சாப்பிட வேணும் போல் தோன்றுகிறது, இதை முடித்ததும் ஒரு வட்லாபத்தை யாராவது ஒரு தட்டில் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். உணவு என்பதற்குள் எத்தனை நினைவுகள், உணவின் ருசி என்பது எத்தனை ஆழமான நினைவாக நாவில் தொடங்கி மூளையின் கீற்றுகளுக்குள் அழுத்தமான படிந்துள்ளது என்பது பெரும் வியப்பைத் தந்தது. என்றைக்கு மீண்டும் பயணம் போகக் கிடைக்குமோ என்று தெரியவில்லை, இலங்கை நண்பர்கள் விரைவில் அறியத்தாருங்கள். உணவின் ருசி என்னை உலகெங்கும் அழைத்துக் கொண்டேயிருக்கிறது, கட்டுரையை முடித்து விட்டு பயணப் பொதியை மீளுருவாக்க வேண்டும்.