Health Tips : நவராத்திரி விரதம் இருப்பவர்களா நீங்கள்..? அப்போ உங்களுக்கான உணவுகள் என்னென்ன தெரியுமா..?
நவராத்திரி விரதம் இருப்பதால் உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றப்பட்டு நம் உடம்பானது தெளிவுடன் விளங்கும்.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒன்பது நாளும் கொலு வைப்பது மற்றும் துர்கா தேவியின் 9 அவதாரங்களுக்கும் ஒவ்வொரு நாளும் படைப்பது என வருகின்ற நாட்கள் முழுவதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் சிறப்பாக பூஜை செய்யும் இதே வேளையில், நிறைய பெண்கள் விரதம் கடைப்பிடிக்கிறார்கள். அந்த காலத்தில் உண்ணா நோன்பு என்ற முறையில் எதுவும் சாப்பிடாமல், இரவு துர்காதேவிக்கு படையல் இட்ட பிறகு, பால் மற்றும் பழம் சாப்பிட்டு தங்கள் விரதத்தை முடிப்பார்கள்.
இந்த விரதம் கடைபிடிப்பதில் அறிவியல் பூர்வமாக உண்மை ஒன்று அடங்கியுள்ளது. வருடம் முழுவதிலும் தேவையில்லாத உணவுகள் சாப்பிட்டு, உடலில் நச்சுக்கள் மற்றும் கொழுப்பு அதிகமாக சேர்ந்திருக்கும். இந்த உண்ணா நோன்பானது, ஆகச்சிறந்த மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. முதல் இரண்டு நாட்கள் உணவு எதுவும் சாப்பிடாமல், இரவில் சிறிது பால் சில பழங்கள் மட்டும் சாப்பிட்டு முடிக்கும் பொழுது, முதல் இரண்டு நாட்கள் மட்டும் உடலில் சற்று சோர்வு தெரியும்.
அதே நேரம் கடவுள் மேல் கொண்ட அதீத பக்தியினால் நம் கவனம் முழுவதும் தேவி துர்க்கை இடம் சென்று விடும். மூன்று நாட்களுக்குப் பிறகு உடலானது நச்சு கழிவுகளை வெளியேற்றும் பணியை துவங்கிவிடும். இதே போல உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தேவைப்படும் ஆற்றலாக மாற்றப்பட்டு நம் உடம்பானது தெளிவுடன் விளங்கும். இவை எல்லாம் பக்தியோடு சேர்த்து நம் உடலுக்கு கிடைக்கும் ஆக சிறந்த நன்மைகள் ஆகும்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில், அனைவராலும் மூன்று வேளையும் விரதம் கடைபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகையால் விரதம் கடைபிடிக்கும் பெண்கள்,வயதானவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் என அனைவருக்கும் எளிதான சிறு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இட்லியை தயாரிக்கும் முறை:
அந்த வகையில் எல்லா வயதினருக்கும் பொருந்தும் உணவாக இட்லியானது இருக்கும். இந்த உணவை தயார் செய்ய முதல் நாள் அரிசி மற்றும் தேவையான அளவு உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து, இவை இரண்டையும் தனித்தனியாக அரைத்து எடுக்க வேண்டும்.
இதில் உளுந்தை அரைக்கும் சமயத்தில் சிறிது வெந்தயம் கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த அரிசி மற்றும் உளுந்து மாவுடன் தேவையான அளவு உப்பை கலந்து நன்றாக கரைத்து வைத்து விட வேண்டும்.ஒரு எட்டு மணித்தியாலங்களுக்கு பிறகு மாவானது சிறிது புளித்து உப்பி வந்திருக்கும். இதை இட்லி கொப்பரையில் ஊற்றி ஆவியில் நன்றாக அவிழ்த்து எடுத்தால், சுவையான இட்லி தயாராகிவிடும்.
இதை வெங்காயம் மற்றும் தக்காளி கலந்து அரைத்த சட்னியுடன் சாப்பிடலாம். இந்த உணவானது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உணவாகும். இதில் அரிசியில் கிடைக்கும் கார்போஹைட்ரேட், உளுந்தின் மூலம் கிடைக்கும் ப்ரோட்டீன் மற்றும் வெந்தயத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவ குணங்கள் என நாள் முழுவதும் விரதம் இருப்பவர்களுக்கு சிறப்பான ஒரு உணவாகும்.
காய்கறி வகைகள் :
காய்கறி வகைகளில் நாம் பச்சையாக சாப்பிடக்கூடியது, அவித்து சாப்பிடக்கூடிய காய்கறி வகைகளை தேர்வு செய்து அவற்றில் உப்பு மற்றும் மிளகுத்தூள் போன்றவற்றை பயன்படுத்தி ஒரு காய்கறி சாலட் ஆக செய்து நாம் சாப்பிடலாம். கேரட், கோஸ், பீட்ரூட், பச்சைக் கீரை வகைகள் மற்றும் பல காய்கறிகளை சேர்த்து சூப் அல்லது சாலடாக செய்து சாப்பிடலாம். இதுவும் ஒரு சிறந்த விரத உணவாகும்.
இதைப் போலவே மற்றும் ஒரு சிறப்பான உணவு பழங்களாகும். பொதுவாக பழங்கள் நம் உடம்பில் இருக்கும் நச்சுக்களை நீக்குகின்றன. பழங்களில் நார்ச்சத்து நிறைய இருப்பதினால் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதோடு, மலமிளக்கியாகவும் செயல்படுகின்றன. சில பழங்கள் ரத்தத்தையும் சுத்திகரிக்கின்றன. ஆகையால் சாலட் என்று சொல்லப்படும் பழங்களின் கலவையானது நாள் முழுதும் விரதம் இருப்பவர்களுக்கு சிறப்பான ஒரு உணவாகும்.
சாலட் எனப்படும் பழக்கலவையை தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
1 ஆப்பிள்
2 ஆரஞ்சு
1 கொய்யா நறுக்கியது
½ கப் கருப்பு திராட்சை
1 கப் ஸ்ட்ராபெரி
¼ கப் மாதுளை
½ பப்பாளி பழம்
2 டீஸ்பூன் தேன்
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
இதை அனைத்தையும் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக தனித்தனியாக வெட்டி எடுத்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் இந்த கலவையில் சிறிது பால் அல்லது ஐஸ்கிரீம் ஆரம்ப கட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி பழக் கலவையை நன்றாக கலந்து சுவையான சத்துக்கள் நிறைந்த பழ சாலட்டை நாம் உண்ணலாம். இவ்வாறு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்,விரதம் இருந்து, மேற்சொன்ன உணவுகளை எடுத்துக்கொண்டு, உடலை செம்மைப்படுத்துவதோடு, துர்கா தேவியின் அருளையும் பெறுங்கள்.
இப்படி சாப்பிடும் சாலட் எனப்படும் பழ கலவையானது உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் மற்றும் உடல் சுத்திகரிக்கும் பணியையும் ஒருங்கே செய்கிறது. இந்த பழக்கலவை நாள் முழுவதும் விரதம் இருப்போரின் உடலை ஆரோக்கியமாக ,புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். மிகவும் சுவை நிறைந்த இந்த பழக்கலவையானது, ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் நாள் முழுவதும் செயல்பட போதுமான ஆற்றலை வழங்குகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் சேர்ந்த இந்தக் கலவையை காலை உணவாக அல்லது மதிய உணவாக சாப்பிடலாம்.