Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!
Immunity booster Juice: நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் மேஜிக் ஜூஸ் எப்படி செய்வது என்று காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பழங்கள், காய்கறிகள், இறைச்சி என உணவில் எடுத்துகொள்ள வேண்டும். அதோடு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள், நெல்லிக்காய் சேர்த்து செய்யும் ஜூஸை குடிக்கலாம். அதன் ரெசிபி இதோ.
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அப்படியே உங்கள் உடலும் இருக்கும். அதாவது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டீர்கள் என்றால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஹார்வேர்ட் பல்கலைக்கழத்தின் ஆய்வு ஒன்றில் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் எந்தவித பலனும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
என்னென்ன தேவை?
நெல்லிக்காய் - 5
தேன் - தேவையான அளவு
ஃப்ரெஷ் மஞ்சள் கிழங்கு - சிறிய துண்டு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். மஞ்சள் கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி எடுக்கவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், மஞ்சள், ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்ததும் வடிக்கட்டவும். இதோடு தேவையான அளவு தேன் கலந்தால் ஜூஸ் தயார்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பெரிய டம்ளர் அளவில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளவும். பிறகு, சிறிது நேரம் கழித்து இதை குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் நெல்லிக்காய்க்கு திறன் அதிகம். மஞ்சள், இஞ்சியும் இதில் சேர்ப்பது கூடுதல் சிறப்பு.
நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்க செய்யவும் பாதுகாக்கவும் உதவுகிறது. சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம், முடி வளர்ச்சியை பலப்படுத்துவது,கண் பார்வை மேம்பாடு ஆகியவற்றிற்கு இது உதவும். நெல்லிக்காய் துவையல், ரசம் என வாரம் இரண்டு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நெல்லிக்காய் சிறந்த உணவாக இருக்கும். ஆய்வுகளின்படி, இது நீரழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாகவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.
நெல்லிக்காயுடன் புதினா, கொத்தமல்லி என சேர்த்து ஜூஸ் குடிக்கலாம். ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் ஏதாவது புதிதாக மாற்றி நெல்லிக்காயுடன் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்கள் நீங்கும்.
பொறுப்புத்துறப்பு :
இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.