Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!
காலை உணவுக்கு ஏற்ற சுவையான கார அவல் கொழக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒன்றரை கப் அவலை கழுவி எடுத்து 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
இதில் பாதி அவலை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அவலை ஊறவைத்து வைத்துள்ள அவலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ( அவலை தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்) இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தலா ஒரு ஸ்பூன் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து சேர்த்து கடலைப் பருப்பு பொன்னிறமானதும் 3 காய்ந்த மிளகாயை எண்ணெயில் கிள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை இதனுடன் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இப்போது நாம் பிசைந்து வைத்துள்ள அவலை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கரண்டியால் நன்றாக கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும். இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டு மீது ஒரு வெள்ளை காட்டன் துணியை பிரித்துப் போட்டு அதன் மீது அவல் உருண்டைகளை அடுக்கி இப்போது துணியை மூடி விட்டு விட வேண்டும். இதை 5 நிமிடம் வரை வேக வைத்து இறக்கி கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அரை ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் சிறிது கறிவேப்பிலை நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து வெங்காயம் வதங்கியதும், தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி பாதி அளவு வதங்கியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இப்போது அவல் உருண்டைகளை இதில் சேர்த்து 4 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். பின் இதை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பறிமாறலாம். இது காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும்.
மேலும் படிக்க
ஊட்டச்சத்து நிறைந்த தோசை... டேஸ்டியான கேரட் சட்னி! இப்படி செய்து அசத்துங்க!