Emotional Eating : பசியே இல்லாதபோதும் சாப்பிடுறீங்களா? இதுதான் உங்க பிரச்சனை.. கவனம் மக்களே..
பசி இல்லாத போது அல்லது வெறுமையாக உணரும் சமயங்களில், அடிக்கடி உணவை உண்பதன் மூலம், உடல் அல்லது மனம் சார்ந்த ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவு,தனிப்பட்ட விருப்பமாக இருக்கும்.சிலருக்கு பிரியாணி,சிலருக்கு பணியாரம், சிலருக்கு நொறுக்கு தீனிகள், சிலருக்கு ஐஸ்கிரீம் என ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தை பொறுத்து இந்த உணவு இருக்கும்.
இப்படியான உணவுகள் விருப்பத்தின் பேரில் இருப்பது தவறில்லை. ஆனாலும்,பசியே இல்லாத நேரத்தில் இத்தகைய உணவுகளை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது,நம்முடைய உடல் நலம் மனநலம் ஆகிய இரண்டுமே வெகுவாக பாதிக்கப்படும்.இப்படி அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருக்கும் போது,உடல் பருமன் ரத்த அழுத்தம்,நீரிழிவு மற்றும் மனம் சார்ந்த குழப்பம்,சோர்வு போன்றவை நம்மை வந்து தொற்றிக் கொள்ளும். இப்படியாக பசி இல்லாத போது அல்லது வெறுமையாக உணரும் சமயங்களில்,நாம் அடிக்கடி இவ்வாறு உணவை உண்பதன் மூலம், நம்முடைய உடல் அல்லது மனம் சார்ந்த ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, உணவு சாப்பிட்டுக் கொண்டே இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நாம் காணும்போது, நீண்ட காலமாக உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்,மன சார்ந்த அழுத்தம், சலிப்பு அல்லது விரக்தியில் இருப்பவர்கள்,வேலைப்பளுவின் காரணமாக இருப்பவர்கள்,அதிகப்படியான பண பிரச்சனையில் இருப்பவர்கள் மற்றும் உறவுகளுக்கு இடையே பிரச்சனைகள் இருப்பவர்கள் ஆகியோர் இவ்வாறு சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனவிரக்தி மற்றும் சலிப்பை தவிருங்கள்:
பசி இல்லாத நேரங்களில் கூட உணவை உட்கொள்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மனவிரக்தி மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பு.
இதனால் நம் வயதுக்கும்,நம்முடைய வயிற்றின் அளவுக்கும் மீறி, உணவுகளை நிறைய சாப்பிட்டு, பல வியாதிகளுக்கு ஆளாகிறோம்.
வள்ளுவரின் கூற்றுப்படி,
"நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல்" என்னும் திருக்குறளுக்கு இணங்க மன விரக்தி மற்றும் சலிப்பினால் உணவினை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது,உணவு சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதை விட,மன அழுத்தம் மற்றும் சலிப்பில் இருந்து விடுபடுவதற்கு நல்ல இசையை கேட்பது,ஏதாவது ஒரு விளையாட்டில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது,உடற்பயிற்சி செய்வது, அல்லது உங்கள் விருப்பத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கை செய்வது என்பதன் மூலம் சலிப்பில் இருந்தும் விரக்தியிலிருந்தும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தும் வெளிவரலாம்.இதன் மூலம் உணர்ச்சியின் காரணமாக சாப்பிடும் உணவுப் பழக்கத்திலிருந்து விடுபடலாம்.
பழக்கத்தின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தவிருங்கள்:
பொதுவாக வேலைகளுக்கு இடையில் நம்மில் ஒரு சிலர் அதிகப்படியான தேநீர் அல்லது காபி குடிப்பதை பார்த்திருப்போம். சிலர் யார் வந்து அழைத்தாலும் அவர்களோடு வெளியில் சென்று ஒரு தேநீரை குடிப்பார்கள்,இப்படியாக பழக்கத்தில் சார்ந்து இருக்கும் இத்தகைய உட்கொள்ளலை, உங்களை நீங்களே,கவனிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.
அதிகப்படியான வேலை பளுவை தவிருங்கள்:
இன்றைய அழுத்தம் மிகுந்த வாழ்க்கை சூழலில்,பணத்தேவை என்பது, அனைவருக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு தலையாய பிரச்சனையாகும்.இதன் பொருட்டு நம் வலிமைக்கு மீறிய,வேலைகளை நாம் எடுத்துக் கொள்கிறோம்.ஆகவே இதிலிருந்து விடுபட,நீங்கள், உங்கள் வாழ்க்கை முறையை ஒருமுறை சீர்தூக்கி பார்த்து,செலவுகளை கட்டுக்குள் கொண்டு வந்து,அதற்கு தகுந்தார் போல்,வேலையை குறைத்துக் கொள்ளுங்கள்.இதன் மூலமும் உணர்வு தூண்டுதலால் சாப்பிடும்,உணவு பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்.
கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யுங்கள்:
பழக்கத்தின் காரணமாகவும், உணர்ச்சி தூண்டுதலாலும் அதிகப்படியாக உண்ணும் மனநலையில் உள்ளவர்கள், கண்டிப்பாக,ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை தினமும் பயிற்சி செய்யுங்கள்.இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,மனதையும் எளிதாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவும்.இப்படியாக மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உணர்ச்சி மற்றும் பழக்கத்தில் காரணமாக உணவு உண்ணுவதில் இருந்து வெளி வரலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )