Karasev : கடைகளில் கிடைப்பதுபோன்ற மொறு மொறு காராசேவு... இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
மொறு மொறுவென சுவையான காராசேவு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு –500 கிராம், அரிசி மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு – 1/2 கப், பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சமையல் சோடா உப்பு -2 சிட்டிகை, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், ஒரு குழி கரண்டி அளவு காய்ச்சிய எண்ணெய், தேவையான அளவு உப்பு, காராசேவை பொரிக்க தேவையான அளவு எண்ணெய்...
செய்முறை
இந்த பொருட்களில் உங்களுக்கு வெறும் மிளகு காரம் வேண்டுமென்றால், மிளகுத்தூள் காரத்தை சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். வாசனைக்காக பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையையும், இந்த மாவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
முதலில் மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து, மசாலா பொருட்கள், உப்பு சேர்த்த கைகளால் நன்றாக கலந்து விட்டு விட வேண்டும். பூண்டை மிக்ஸி ஜாரில் தோலுரித்து போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து எடுத்து அதை இந்த மாவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு முதலில் சூடான எண்ணெயை மாவில் ஊற்றி விட்டு, கரண்டியால் மாவை ஒரு முறை கிளறி விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு போல, பிசைய வேண்டும்.
இந்த மாவை பிசையும்போது அதிக தண்ணீராகவும் இல்லாமல், அதிக கெட்டிப்பதமாகவும் இல்லாமல், முறுக்கு மாவு பக்குவத்தில் பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு இதை சிறு சிறு உருண்டைகளாக, உங்கள் வீட்டு முறுக்கு அச்சின் அளவிற்கேற்ப மாவு உருண்டைகளை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மூன்று துளைகளை கொண்ட முறுக்கு அச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். முறுக்கு குழாயில், உள்பக்கம் எண்ணெய் தடவி, மாவு உருண்டைகளை அதனுள் வைத்து பிழிய வேண்டும். காராசேவு உங்களுக்கு எந்த நீளத்திற்கு வேண்டுமோ, அந்த அளவிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், அச்சை பயன்படுத்தி காராசேவு பிழிய வேண்டும். அதன் பின்பு அடுப்பை, மிதமான தீயில் வைத்து காராசேவை வேக வைக்க வேண்டும். இப்போது காராசேவு நன்று வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எண்ணெயில் இருந்து காராசேவை எடுக்க வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் பயன்படுத்தி காராசேவு செய்தால் கடைகளில் கிடைக்கும் காராசேவு பக்குவத்தில் வரும். இந்த காராசேவு சாப்பிடுவதற்கு நன்கு மொறு மொறுவென சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க