Sponge Gourd Palak Pulao: இவ்ளோ நன்மைகளா? பீர்க்கங்காய் - பாலக்கீரை புலாவ்.. லஞ்ச் பாக்ஸுக்கு ஒரு நல்ல ரெசிப்பி.. இதோ
Sponge Gourd Palak Pulao: பீர்க்கங்காய் - பாலக்கீரை புலாவ் செய்முறையை இங்கே காணலாம்.
பாலக் முதல் புளித்தகீரை வரை கீரை வகை சாதம் செய்து அசத்தலாம். கீரைகளுடன் சில காய்கறிகளை சேர்த்தும் சாதம் செய்யலாம். புலாவ் செய்யும்போது தேங்காய் பால் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். வாரத்தில் இரண்டு நாள் கீரை சாப்பிடுவது உடல்நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதோடு, பீர்க்கங்காய் உணவில் சேர்ப்பதும் ஆரோக்கியமானது. பாலக்கீரை, பீர்க்கங்காய் புலாவ் எப்படி செய்வது என்று காணலாம்.
பாலக்கீரை பீர்க்கங்காய் புலாவ்
என்னென்ன தேவை?
அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 2
பீர்க்கங்காய் - 4
பாலக்கீரை - ஒரு கட்டு
தேங்காய் பால் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவையான அளவு (வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து செய்யலாம்.)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
பிரியாணி இலை, பட்டை, கிராம்பு - தலா 1
செய்முறை
அரிசியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். கீரையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து அதை நறுக்கி தனியே வைக்கவும். பீர்க்கங்காய் நன்றாக தோல் நீக்க துண்டுகளாக நறுக்கவும். ரொம்பவும் சிறியதாக நறுக்க வேண்டும்.எளிதாக வெந்துவிடும் என்பதால் பீர்க்கங்காய் குழைய வாய்ப்பிருக்கிறது.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இதோடு,நறுக்கிய பாலக்கீரை, பீர்க்கங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின்னர், அரிசி, தேங்காய் பால், சேர்த்து நன்றாக கலக்கவும். குக்கரை மூடி 3 விசில் விடவும். அவ்வளவுதான் புலாவ் ரெடி.
இதை முழுவதுமாக தேங்காய் பாலில் செய்யலாம். இல்லையெனில், செய்யும் அரிசியின் அளவுக்கு ஏற்றவாறு பாதி தேங்காய் பால், மீதி தண்ணீர் சேர்க்கலாம். இதை இப்படியும் செய்யலாம் - வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்தும் செய்யவும். சுவை மாறுபடும். இதற்கு தக்காளி சேர்ப்பது நன்றாக இருக்கும்.
பீர்க்கங்காய் துவையல், கூட்டு என பல வகைகளில் செய்து சாப்பிடலாம்.தோசை மாவில் பீர்க்கங்காய் விழுது சேர்த்து தோசையாக செய்யலாம். பீர்க்கங்காய் தோலில் துவையல் செய்யலாம்.பீர்க்கங்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட உதவும். கலோரி குறைவு. இதை வாரத்தில் இரண்டு முறை சமைக்கலாம். ஆன்டி- ஆக்ஸிடண்ட், மினரஸ் நிறைந்துள்ளன. ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.