Zelensky Feels: பேசுறதெல்லாம் பேசிபுட்டு, இப்ப ஃபீல் பண்ணா என்னா அர்த்தம்.? ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் வார்த்தைப் போரில் ஈடுபட்ட பின்னர், ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியேறிய ஜெலன்ஸ்கி, அமெரிக்காவிலேயே பேட்டி அளித்தள்ளார். அதில் அவர் என்ன கூறினார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த வார்த்தைப் போர், உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியேறிய ஜெலன்ஸ்கி, அமெரிக்காவிலேயே பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்று தெரியுமா.? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே முற்றிய வார்த்தைப் போர்
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான இந்த பேச்சுவார்த்தையின்போது, ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. உக்ரைனுக்கு உதவியதற்காக நன்றியுடன் செயல்பட வேண்டும் என கூறிய அதிபர் ட்ரம்ப், அமைதிக்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டார். மேலும், அமெரிக்கா உதவவில்லை என்றால், 2 நாட்களில் உக்ரைனை ரஷ்யா தவிடுபொடியாக்கி இருக்கும் என தெரிவித்தார்.
அதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனை முட்டாள் எனக் கூறிய ட்ரம்ப், அந்த முட்டாள் அதிபர்தான் உங்களுக்கு 350 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை அளித்துவிட்டார் என ஜெலன்ஸ்கியிடம் கூறினார்.
இதனால் டென்ஷனான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தான் நன்றியுடன் இருப்பதாகவும், ஆனால், ரஷ்யா விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை என்பதுபோல் பேசினார். இதனால் ட்ரம்ப்பும் டென்ஷனாகி பேசினார். இந்த வார்த்தைப்போர் முற்றிய நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் வற்புறுத்தியதால், ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியேறினார் ஜெலன்ஸ்கி.
இந்த சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றிற்கு ஜெலன்ஸ்கி பேட்டியளித்துள்ளார்.
நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது - ஜெலன்ஸ்கி
அந்த பேட்டியில், நடந்த சம்பவத்திற்காக அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, ”நாங்கள் மேசமாக நடந்துகொண்டோமா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால், ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான் மரியாதையை நான் விட்டுக்கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இரு தரப்பிற்கும் நல்லதல்ல என கூறினார். நான் வெளிப்படையாக இருந்தாலும், ரஷ்யா மீதான உக்ரைனின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி. எங்களை பொறுத்தவரை அவர்கள்(ரஷ்யா) கொலைகாரர்கள் என விமர்சித்தார்.
அமெரிக்கர்களும் எங்களது மிகச்சிறந்த நண்பர்கள், அதேபோல் ஐரோப்பியர்களும் எங்களது மிகச்சிறந்த நண்பர்கள் என கூறிய அவர், ரஷ்யா எங்கள் எதிரி என தெரிவித்தார். ஆனால், அதற்காக அமைதி வேண்டாம் என்பதில்லை என்றும், எதார்த்தத்தை உணர்த்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
"அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம்"
இந்த மோதல், ராஜதந்திர உறவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தான் உணர்வதாகவும், ஆனால், ரஷ்யாவுக்கு எதிரான போரில், அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் கூறினார். அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால், தங்களுக்கு கடினமான சூழ்நிலை ஏற்படும் என்று கூறிய ஜெலன்ஸ்கி, ஊடகங்கள் முன்னிலையில் நடந்த வார்த்தைப்போர் வருந்தத்தக்கது என தெரிவித்தார்.
இந்த மோதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கு, அது ஒரு மிகவும் கடினமான சூழ்நிலை என ஜெலன்ஸ்கி விவரித்தார். அதோடு, உக்ரைனுக்கு நீதி கிடைப்பதிலும், அமைதி நிலவுவதிலும், கனிம ஒப்பந்தம் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது, இதில் உக்ரைன்-அமெரிக்கா இடையேயான நட்பு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார் ஜெலன்ஸ்கி.
ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நெருக்கம் குறித்த கேள்விக்கு, ட்ரம்ப் நடுநாயகமாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ட்ரம்ப் உடனான மோதலை சரி செய்துவிட முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியாக, நடந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
ட்ரம்ப் ஒரு கோபக்காரர் என்பது உலகறிந்த விஷயம். அவர் ஜெலன்ஸ்கியை மன்னிப்பாரா என்பதையும், வரும் நாட்களில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

