Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..
Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி.. டைம் கிடைக்கும்போது தயாரிச்சு வெச்சுக்கிட்டா இனிமே சமையல் ஈஸிதான்..
முன்பெல்லாம் வழக்கமாக பல வீடுகளில் வெங்காய வடகம் தயாரித்து வைத்திருப்பார்கள். கோடைக்காலம் வந்துவிட்டால் மோர் மிளகாய், சோற்று வத்தல், கறிவேப்பிலை பொடி ஆகியவற்றைத் தயாரித்து வைத்துக்கொள்வதைப்போல, வெங்காய வடகத்தையும் ரெடிமேடாக தயாரித்து வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகவே இருந்துவந்தது. இப்போது அனைவரும் வேலை நிமித்தமாக பயணிக்க வேண்டி இருப்பதால், இந்த வழக்கம் குறைந்துவிட்டதென்றே கொள்ளலாம். ஆனால், வெங்காய வடகம் தயாரித்து தயாராக வைத்துக்கொண்டால் தாளிப்புக்கு பயன்படுத்தி சமையல் வேலையை சீக்கிரமே முடிக்கலாம் என்பதே சமையல் நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
சாம்பார் முதல் மசாலா கறி வரை பயன்படுத்தப்படும் இந்த வெங்காய வடகத்தை நீங்கள் ஒரு வருடம் வரையில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் ஒன்றரை கப்
பூண்டு பற்கள் - அரை கப்
கறிவேப்பிலை கொத்து
உளுத்தம்பருப்பு - கால் கப் (ஊறவைத்தது)
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு
சீவல் சீவலாக நைஸாக வெட்டிவைத்த வெங்காயத்தை, பூண்டுடனும், கறிவேப்பிலையுடனும் சேர்ந்து கலந்துகொள்ளவும். கடுகு, வெந்தயம், தனியா, சீரகம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.
ஊறவைத்த உளுத்தம்பருப்பை அரைத்து விழுதை எடுத்துக்கொள்ளவும். விழுதை ஏற்கெனவே இருக்கும் வெங்காய கலவையுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். எலுமிச்சை அளவில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, வெயிலில் நன்றாக உலர்த்திவைக்கவும். இதை நன்றாக காற்று புகாத பெட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவையானபோது, சாம்பார், குழம்பு, கறிவகைகளுக்கு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம். இது சமையலின் சுவையை ஆஹாவென கூட்டிவிடும்.