(Source: ECI/ABP News/ABP Majha)
Winter Soup : ஹச் ஹச்சுன்னு தும்மினது போதும்.. இந்த மழைக்கால சூப் வகைகள் செம்ம சப்போர்ட்
காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விட தேவையான அளவு கலோரிகள்,தாதுப்புகள், புரதம், ஊட்டச்சத்துக்கள் போன்ற சற்றே கூடுதலான பலன்களை சூப் குடிப்பதன் மூலம் பெறலாம்.
மழையின் இதமான குளிரில் வீட்டில் இருந்தவாரே அந்த நாளை கடந்து போக, நாம் எளிமையான சூப் வகைகளை செய்து ருசிக்கலாம். மழையின் இதமான குளிரில் சூடான மற்றும் காரமான உணவுகளை விரும்பாதவர்கள் யார் தான் இருக்க முடியும்.
இந்தக் காரமான சுவையான சூப் வகைகளை செய்து அசத்துங்கள். நாம் ஒவ்வொரு முறையும் வீட்டில் செய்யும் பழைய தக்காளி சூப்பு அல்லது கோன் சூப்புகளுக்கு பதிலாக இந்த சூப் வகைகளை செய்து , சற்று வித்தியாசமாக அன்றைய பொழுதை கழிக்கலாம்.
உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த சூப் வகைகளை நாம் எளிமையாக செய்து பரிமாறலாம். அசைவ உணவுகளை வைத்து செய்யும் சூப் ,க்ரீமி வெஜிடபிள் சூப், காளான் சூப் வகைகளை இங்கே பார்க்கலாம்.
1. கிரீமியான காய்கறி சூப் :
இந்த இனிமையான காய்கறி சூப்பில் கேரட், பிரஞ்சு பீன்ஸ், தக்காளி மற்றும் பட்டாணி போன்ற ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் . மிகவும் எளிமையான முறையில் சத்தான சூப்பை நாம் விரைவாக செய்து முடிக்கலாம். இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை கொண்டிருப்பதோடு உடலுக்கு புத்துணர்ச்சியையும் இது வழங்குகிறது.
தேவையான பொருட்கள்:
3 கப் காய்கறிகள் (தக்காளி, கேரட், பட்டாணி, கோவக்காய், பிரஞ்சு பீன்ஸ்)
உப்பு சுவைக்க
1/2 டீஸ்பூன் சீரக தூள்
1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
சில தேக்கரண்டி எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை:
1. அனைத்து காய்கறிகளையும் பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
2.நன்கு வேகவைத்த பிறகு, அதை ஒரு பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
3.ஒரு வடிகட்டி மூலம் அரைத்த காய்கறிகளை வடிகட்டவும்.
4.எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, சுவைக்க உப்பு, ஜீரகம், கடுகு மிளகு தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு சமைத்து சூடாக பரிமாறலாம்.
2. காளான் சூப்:
காளான் சூப் மிகவும் சுவையாகவும் சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான ஒரு உணர்வையும் வழங்கும். இதைத் தயாரிக்க, காளான் ,சில சுவையூட்டிகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட எளிமையான பொருட்கள் மட்டுமே தேவை.
தேவையான பொருட்கள்:
200 கிராம் வெள்ளை பட்டன் காளான்கள்
2 கப் வெள்ளை வெங்காயம்,
1/2 டீஸ்பூன் நலலெண்ணெய்
பூண்டு
1/2 துண்டு இஞ்சி,
1 டீஸ்பூன் செலரி
1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1 டீஸ்பூன் சோயா சாஸ்
5 வெங்காயக் கீரைகள்
3 கப் தண்ணீர் மற்றும் உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
1.ஒரு கடாயில் ½ தேக்கரண்டி நல்லெண்ணையை ஊற்றி மிதமான தீயில் நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.
2. அடுத்து நறுக்கிய வெள்ளை வெங்காயத்தின் இலைகளை சேர்த்து வதக்கவும். பின்னர் வெட்டி வைக்கப்பட்ட காளான்கள் மற்றும் செலரியை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் கிளறவும்.
3. பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து , சூப்பை குறைந்த தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
4. அதில் சுவைக்கேற்ப சோயா சாஸை சேர்த்துக் கொள்ளவும்
5. அடுத்து ½ டீஸ்பூன் நறுக்கிய கருப்பு மிளகு மற்றும் சுவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.
6. சூப்பை ஒரு மூடியால் மூடிவிட்டு 15 நிமிடங்கள் காளான்கள் நன்கு அவியும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
7. பின்னர் தீயை அணைத்துவிட்டு சூப்பின் மேல் 5 தேக்கரண்டி வெள்ளை வெங்காய நறுக்கிய கீரைகளை தூவி அலங்கரிக்கவும் .
3. பூண்டு சூப்:
பூண்டின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் தினம் தோறும் நமது சமையலில் பூண்டின் வாசம் இல்லாமல் போகாது. குறிப்பிட்ட எல்லா உணவுகளிலும் பூண்டை சேர்த்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஆகவே இந்த பூண்டை வைத்து எவ்வாறு சுவையான சூப்பை தயாரிக்கலாம் என பார்க்கலாம். இதில் ஒரு பூண்டை முழுமையாக சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் விருப்பமானால் இறைச்சி வகைகள் ஏதேனும் ஒன்றை சேர்த்து இந்த சூப்பை நீங்கள் தயாரித்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு முழுப் பூண்டு
6-7 பூண்டு (நசுக்கப்பட்டது)
1 துண்டு இஞ்சி
1 பெரிய வெங்காயம்
1 நடுத்தர கேரட்
விருப்பமான காய்கறிகள் (முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, சோளம், பீன்ஸ் போன்றவை)
1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
1 தேக்கரண்டி கருப்பு மிளகு
சுவைக்கு ஏற்ப உப்பு
1 டீஸ்பூன் வெண்ணெய்
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி ,பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.
2.காய்கறிகள் சிறிது வேகும் வரை நன்கு சமைக்கவும்
3. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு , முழுப் பூண்டு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலந்து கொள்ளவும்
5.மற்றொரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளாரை 2 டீஸ்பூன் தண்ணீரில் நன்கு கலந்து கொள்ளவும் . இந்தக் கலந்த கான்ஃபிளாரை கொதிக்கும் சூப்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
6. பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விரும்பிய உணவுகளுடன் பரிமாறிக் கொள்ளலாம்.
4. கோழி இறைச்சி சூப்:
கோழி இறைச்சி, எலுமிச்சை, தனியாத்தூள் போன்றவற்றை கொண்டு செய்யப்படும் இந்த சிக்கன் சூப்பானது மிகவும் சுவை மிக்கதாகும். மழை நாட்கள் மற்றும் குளிர்காலங்களில் சுவைக்க மிகவும் இதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
180 மில்லி தண்ணீர்
40 கிராம் கோழி இறைச்சி
1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் கொத்தமல்லி
2 எலுமிச்சை
1/2 தேக்கரண்டி வெண்ணெய்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் விழுது
1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை:
1. முதலில் 180 மில்லி தண்ணீரை எடுத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
2. பின்னர் துண்டுகளாக்கப்பட்ட கோழி இறைச்சியை போட்டு வேக விடவும்.
3. பின்னர் கோழி இறைச்சி நன்கு அவிந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி, பச்சை மிளகாய் விழுது, வெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். இவற்றை சிறிது நேரம் வேக வைக்கவும்.
4. அடுத்து சுவைக்கு தகுந்தாற்போல் உப்பு சேர்த்து கெட்டியாக சோள மாவை நீரில் கரைத்து சூப்பில் கலந்து கொள்ளவும்
.5. சுமார் மூன்று நிமிடங்கள் வரை நன்கு வேக விட்டு இறக்கி, கொத்தமல்லி இலைகளை தூவி, அலங்கரிக்கவும்
5. சிக்கன் நூடுல்ஸ் சூப்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக் கூடியது தான் சிக்கன் நூடுல்ஸ் சூப். இந்த சூப்பில் லெமன் கிராஸ் எனப்படும் எலுமிச்சை புல் மற்றும் சைனீஸ் கேபேஜ் எனப்படும் கோஸ் வகை மற்றும் நூடுல்ஸ், கோழி இறைச்சி துண்டுகள் போன்றவற்றை சேர்த்து இந்த சுவையான சூப் செய்யப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
வேகவைக்கப்பட்ட நூடுல்ஸ்
கோழி இறைச்சி வேகவைத்த தண்ணீர்
1 கேரட்
2 சைனீஸ் கேபேஜ் ( கோஸ் இலை) 3-4 பச்சை மிளகாய்,
நறுக்கப்பட்ட லெமன் கிராஸ் (எலுமிச்சை புல்),
1 டீஸ்பூன் செலரி,
3 பூண்டு
1/4 வெள்ளை வெங்காய கீரை
சிவப்பு முள்ளங்கி, துண்டுகள்
2 டீஸ்பூன் இஞ்சி, நறுக்கியது
1 டீஸ்பூன் லைட் சோயா சாஸ்
1 தேக்கரண்டி வினிகர்
1 தேக்கரண்டி சர்க்கரை
1 தேக்கரண்டி எண்ணெய்
2-3 கோழி இறைச்சி துண்டுகள்
செய்முறை:
1. ஒரு வாணலியில், எண்ணெயை சூடாக்கி இஞ்சி, பூண்டு, வெங்காயம், எலுமிச்சை, செலரி. பூண்டு போன்றவற்றை வதக்கி பொன்னிறமாக மாறியவுடன், சிக்கன், சோயா சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்து, 10 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
2. பின்னர் கோழி இறைச்சி அவித்த நீரை அதனுடன் சேர்க்கவும்
3. அடுத்து அடுப்பில் உள்ள சூப்புடன் கேரட், மிளகாய் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
4.அத்துடன் வேகவைத்த நூடுல்ஸை சூப் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக சூப்பில் முள்ளங்கி கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.